LATEST NEWS
“விசிலும், இரட்டை இலையும் இணைய எல்லா வேலையும் நடக்கும்” தமிழ்நாட்டில் புதிய அரசியல் குண்டை தூக்கி வீசிய தவெக ஆதவ் அர்ஜுனா..!!
தமிழக வெற்றி கழகத்தின் மாநிலத் துணைப் பொதுச்செயலாளரும், தற்போதைய அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா, தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தல் முடிவுகளுக்குப் பின் தமிழ்நாட்டின் அரசியல் கட்டமைப்பு குறித்து மிகவும் அதிரடியான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். இடைத்தேர்தலில் தவெக பெற்ற மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அதிமுக மற்றும் தவெக ஆகிய இரு கட்சிகளின் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்துப் பரபரப்பான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். குறிப்பாக, எடப்பாடி பழனிசாமியின் தலைமை மீதான அதிமுக தொண்டர்களின் அதிருப்தியை இந்தத் தேர்தல் முடிவுகள் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது பேட்டியில், “அன்றைய முதலமைச்சர் பக்தவத்சலம் தான் இன்றைய இ.பி.எஸ். அன்று காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி எப்படி அப்படியே எம்.ஜி.ஆருக்குச் சென்றதோ, அதேபோல் இன்று அ.தி.மு.க-வின் ஒட்டுமொத்த வாக்கு வங்கியும் த.வெ.க-விற்கு வந்துள்ளது” என்று மிகக் கடுமையான ஒப்பீட்டை முன்வைத்துள்ளார். மேலும், இ.பி.எஸ். மீது மக்கள் மற்றும் கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் தங்களது முழுமையான நம்பிக்கையை இழந்துவிட்டார்கள் என்றும், இந்தத் தேர்தல் சரிவு அதிமுகவின் வீழ்ச்சியைத் தெள்ளத்தெளிவாகக் காட்டுகிறது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
இந்த அரசியல் அலையின் அடுத்தகட்ட நகர்வாக, தவெகவின் அசுர வளர்ச்சியைத் தாங்க முடியாமல், வரும் நாட்களில் இரட்டை இலையும் விசிலும் சேர்வதற்கான எல்லா வேலைகளும் இனி நடக்கும் என்று ஒரு புதிய அரசியல் குண்டை உடைத்துள்ளார். அதிமுகவின் வாக்குகள் தவெகவிற்கு மாறியுள்ள சூழலில், தங்களது அரசியல் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள அதிமுக தரப்பில் இருந்து தவெகவுடன் கூட்டணி வைப்பதற்கோ அல்லது இணைவதற்கோ முறையான பேச்சுவார்த்தைகள் மற்றும் திரைமறைவு வேலைகள் விரைவில் தொடங்கும் என்பதை அமைச்சர் தனது பேட்டியின் மூலம் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
