LATEST NEWS
மார்பில் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட எம்.சி.ஏ மாணவர்.. “12 வயது சிறுமிக்கு போன் வாங்கி கொடுத்தது ஏன்..?” பெரம்பலூரில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொடூரம்..!!!
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள வெண்பாவூர் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் அபிமன்யு (21), 12 வயது சிறுமிக்கு செல்போன் வாங்கிக் கொடுத்துப் பேசி வந்த விவகாரத்தில், கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாகச் சிறுமியின் தந்தையும், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவருமான பாலசுப்பிரமணியனை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
கொல்லப்பட்ட அபிமன்யு பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.சி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் பாலசுப்பிரமணியனின் 12 வயது மகளுக்குப் புதிய செல்போன் வாங்கிக் கொடுத்து, அவரிடம் தொடர்ந்து பேசி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விபரம் சிறுமியின் தந்தை பாலசுப்பிரமணியனுக்குத் தெரியவரவே, அவர் ஆத்திரமடைந்து அபிமன்யுவின் வீட்டிற்குச் சென்று நியாயம் கேட்டுள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம், ஒருகட்டத்தில் பெரும் தகராறாக மாறியது. இதில் ஆத்திரத்தின் எல்லைக்கே சென்ற பாலசுப்பிரமணியன், இரும்புக் கம்பியால் அபிமன்யுவைத் தாக்கியதோடு, கத்தியால் அவரது இடது பக்க மார்பில் கொடூரமாகக் குத்தியுள்ளார். இத்தாக்குதலில் பலத்த காயமடைந்த மாணவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த கைகளத்தூர் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியதோடு, உறவினர் வீட்டில் தலைமறைவாக இருந்த பாலசுப்பிரமணியனை மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.
