LATEST NEWS
“துப்பினால் ரூ.500 அபராதம் சொன்ன இடத்துல இது எதுக்கு..?” மெட்ரோ ரயில் நிலையத்தில் வைக்கப்பட்ட அந்த ஒரு பொருள்.. இணையத்தில் வெடித்த காரசார விவாதம்..!!
மும்பை மெட்ரோ நிலையத்தில் தொடுதல் இல்லாத “ஸ்பிட் பின்” (துப்பும் தொட்டி) ஒன்று பொருத்தப்பட்டிருப்பது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி, குடிமக்களின் ஒழுக்கம் மற்றும் சமூகப் பொறுப்பு குறித்து இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ‘ஈஸிஸ்பிட்’ என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்தத் தொட்டி, “உலகின் முதல் துப்பக்கூடிய பகுதி” என்று குறிப்பிடப்பட்டு, மும்பை மெட்ரோவின் சின்னம் மற்றும் “பொறுப்புடன் செயல்படுங்கள்” என்ற செய்தியோடு வைக்கப்பட்டுள்ளது. உள்ளூர் ஆர்வலரான சோரு படேனா என்பவர் இந்த புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில், “எனது மும்பை மெட்ரோ, இப்போது பிரத்யேகமாக துப்பும் மண்டலங்களுடன்” என்ற தலைப்பில் பகிர்ந்ததைத் தொடர்ந்து இது வைரலானது.
மும்பை மெட்ரோவின் அதிகாரப்பூர்வ விதிகளின்படி நிலைய வளாகத்திற்குள் துப்புவதற்கு கடுமையான தடை உள்ளதோடு, மீறினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது. இந்நிலையில், துப்புவது அபராதத்திற்குரிய குற்றம் எனும்போது, அதற்கென தனியாக ஒரு தொட்டியை அமைப்பது ஏன் என்ற கேள்வியை பயணிகள் மற்றும் இணையவாசிகள் எழுப்பியுள்ளனர். இத்தகைய முயற்சி சுகாதாரமற்ற பழக்கத்தை ஊக்குவிப்பதாக அமைவதோடு, பொதுமக்களின் பொது அறிவுக்கே சவாலாக இருப்பதாக பலரும் தங்களது அதிருப்தியைப் பதிவிட்டு கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இணையவாசிகளின் கருத்துப் பிரிவில், “துப்புபவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் மெட்ரோ நிர்வாகம் ஏன் இப்படி செய்கிறது?” என்றும், “அடிப்படை கழிப்பறை வசதிகளை அமைப்பதை விட்டுவிட்டு இத்தகைய செயல்களுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள்” என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும், தாதர் மற்றும் மஹிம் போன்ற சில மெட்ரோ நிலையங்களின் கழிப்பறைகளில் இருந்த கை உலர்த்தும் இயந்திரங்கள் அகற்றப்பட்டு, ஊழியர்கள் அவற்றை தரை மற்றும் துணிகளை உலர்த்தப் பயன்படுத்துவது போன்ற பிற நிர்வாகக் குறைபாடுகளையும் பயனர்கள் சுட்டிக்காட்டி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
