Uncategorized
மர்ம நிலையில் உயிரிழந்த பெண் குழந்தை !!! விசாரணை நடத்தி வரும் போலீசார் ,கரூரில் நடந்த பரபரப்பு !!!

கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள வடுகப்பட்டி கிழக்கு மேடு பகுதியை சேர்ந்த சிவ சிங்கபெருமாள் (வயது 40). இவரது மனைவி சங்கீதா (30). கூலிவேலை செய்து வருகின்றனர்..இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளன. சசினா (10), சாதனா (7) என 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், மீண்டும் கர்ப்பம் ஆன சங்கீதாவுக்கு, கடந்த 10-ம் தேதி அன்று பஞ்சப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மூன்றாவதாகவும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து, தம்பதி குழந்தையை வீட்டுக்குக் கொண்டு வந்து விட்டனர். ஆனால், கடந்த 14-ம் தேதி குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி, பஞ்சப்பட்டி ஆரம்பசுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றதாகக் கூறப்படுகிறது.
பின்னர், மேல்சிகிச்சைக்காக குளித்தலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இந்நிலையில், குழந்தை இறந்ததில் மர்மம் இருப்பதாக மருத்துவர்கள் சந்தேகம் அடைந்து புகார் அளிக்க, போலீசார் வழக்கு பதிவுசெய்து, சிவசிங்கபெருமாள் – சங்கீதா தம்பதியிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில், இறந்த குழந்தையை அந்தத் தம்பதி அரசு அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்காமல் தங்களது தோட்டத்தில் புதைத்தது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, நேற்று மதியம் குழந்தையின் தந்தையான சிவசிங்கபெருமாளை போலீசார் சம்பந்தப்பட்ட இடத்துக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, அவர் குழந்தை புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டினார். பின்னர், கிருஷ்ணராயபுரம் தாசில்தார் மகாமுனி முன்னிலையில், புதைக்கப்பட்ட பெண் குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. பின்னர் அந்த இடத்திலேயே கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள், குழந்தை உடலை பிரேதப் பரிசோதனை செய்தனர்.
பின் குழந்தையின் உள்ளுறுப்புகளை எடுத்து மருத்துவக் குழுவினர் ஆய்வுக்காக திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆய்வு முடிவுக்குப் பின்னர்தான் குழந்தை எப்படி இறந்தது என்பது தெரியவரும். ஏற்கெனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் மூன்றாவதும் பெண் குழந்தையாக பிறந்த விரக்தியில் அந்தக் குழந்தையின் பெற்றோரே குழந்தையின் இறப்புக்குக் காரணமாக இருக்கலாம் என்று காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கிறார்கள். அறிக்கை கிடைத்தவுடன், மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார் தெரிவித்தனர்.இந்த அதிர்ச்சி செய்தி இணையத்தில் பரவி வருகிறது…