LATEST NEWS
தற்காலிக செவிலியர்களுக்கு செம குட் நியூஸ்..! பணி நிரந்தரம் அரசாணை 2 வாரத்தில் ரிலீஸ்… தமிழக அரசு அதிரடி..!!!
நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் அருண்ராஜ், செய்தியாளர்களிடம் பேசுகையில், தற்காலிக செவிலியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று முதற்கட்டமாக 2,500 செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வதற்கான அரசாணை இன்னும் 2 அல்லது 3 வாரங்களில் வெளியிடப்படும் என்று தெரிவித்தார். மேலும், நீதிமன்ற தடையாணை காரணமாக தாமதமாகியுள்ள செவிலியர் உதவியாளர் பணி நியமனங்கள் சட்டரீதியாகச் சரிசெய்யப்பட்டு வருவதாகவும், புதிதாகத் தேர்வு செய்யப்பட உள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை உள்ள இடங்களில் நியமிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த அமைச்சர், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இது குறித்துத் தைரியமாகப் புகார் அளிக்கலாம் என்று கேட்டுக்கொண்டார். மேலும், குமரி மாவட்டத்தில் மருத்துவக் கழிவுகள் விதிமுறைகளை மீறி புதைக்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பயனாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப விரைவில் பெட் ஸ்கேன் வசதி ஏற்படுத்தப்படும் என்றும் உறுதி அளித்தார்.
இத்துடன், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் கொளத்தூர் எம்.எல்.ஏ. பாபுவின் உடல்நிலை நாளுக்கு நாள் சீரடைந்து வருவதாகவும், அவர் விரைவில் வீடு திரும்புவார் என்றும் அமைச்சர் தெரிவித்தார். மேலும், கடந்த ஆட்சிக் காலத்தில் நிலவிய மருத்துவர் பணியிட ஏற்றத்தாழ்வுகளைச் சீர்செய்யவே தேவைக்கு அதிகமாக உள்ள இடங்களில் இருந்து மருத்துவர்கள் மறுபகிர்வு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் அருண்ராஜ் விளக்கமளித்தார்.
