LATEST NEWS
“2100-க்குள் மனித இனம் ஒட்டுமொத்தமாக அழியும்..?” 35 உலக நிபுணர்கள் விடுத்த ‘ரெட் அலர்ட்.. லான்செட் அறிக்கையின் அதிர்ச்சி உண்மைகள்..!!
லான்செட் ஆணையம் தயாரித்துள்ள 21 ஆம் நூற்றாண்டின் உலகளாவிய சுகாதார அச்சுறுத்தல்கள் குறித்த புதிய ஆய்வறிக்கை, அடுத்த 75 ஆண்டுகளில் மனிதகுலம் ஒட்டுமொத்தமாக அழிவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக அதிரவைக்கும் எச்சரிக்கையை விடுத்துள்ளது. மனித ஆரோக்கியத்திற்கும் உயிர்வாழ்விற்கும் தீங்கு விளைவிக்கக்கூடிய 17 முக்கிய அச்சுறுத்தல்களை இந்த அறிக்கை அடையாளம் கண்டுள்ளது. குறிப்பாக, செயற்கை நுண்ணறிவின்தவறான பயன்பாடு மூலம் உருவாக்கப்படும் கொடூரமான உயிரி ஆயுதங்கள் மற்றும் அணுஆயுதப் போர்கள் ஆகியவை மனித இனத்தின் அழிவுக்கு முதன்மைக் காரணமாக அமையலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அணுஆயுதப் போரினால் ஏற்படும் வளிமண்டல துகள்கள் சூரிய ஒளியைத் தடுத்து, உலகளாவிய உணவு நெருக்கடி மற்றும் பெரும் பஞ்சத்திற்கு வழிவகுக்கும் என்றும், இவற்றுடன் பருவநிலை மாற்றம், காற்று மாசுபாடு, சர்வதேச உதவிக் குறைப்பு மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாடு ஆகியவையும் உலகை அச்சுறுத்தி வருவதாக இந்த அறிக்கை விவரிக்கிறது.
உலகளவில் பெரும் சவாலாக உருவெடுத்துள்ள இந்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள சர்வதேச கூட்டு முயற்சிகள் மிகவும் அவசியம் என்பதை இந்த அறிக்கை வலியுறுத்துகிறது. லான்செட் ஆணையத்தின் 35 மருத்துவ மற்றும் அறிவியல் நிபுணர்கள் கொண்ட குழுவால் மிக விரிவாகத் தயாரிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கை, ஜெர்மனியின் பெர்லினில் நடைபெறவுள்ள உலக சுகாதார உச்சிமாநாட்டில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இதுகுறித்து லான்செட் ஆணையத்தின் இணைத் தலைவரான பேராசிரியர் கிறிஸ்டோபர் முர்ரே கூறுகையில், உலகத் தலைவர்கள் இன்று எடுக்கும் முடிவுகளே எதிர்கால சந்ததியினரின் உயிர்வாழ்வைத் தீர்மானிக்கும் என்பதால், உலக அரசாங்கங்கள் இந்த ஆபத்துகளை முன்கூட்டியே கணித்து, அவற்றை எதிர்கொள்வதற்கான நிதி ஒதுக்கீட்டையும் அவசர வளங்களையும் உடனடியாக ஏற்படுத்த வேண்டும் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
