LATEST NEWS
தாத்தா… நீங்க பூரி சுட்டுக் கொடுத்தாத்தான் சாப்பிடுவேன்..! பேரனின் ஆசையை நிறைவேற்றிய.. தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி..!!
தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தனது பேரனின் அன்பான வேண்டுகோளை ஏற்று, சமையலறைக்குச் சென்று அவனுக்காகப் பூரி சுட்டுக் கொடுத்த நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. எப்போதும் அரசியல் கூட்டங்கள், அரசு அதிகாரிகளுடனான ஆலோசனைகள் எனத் தீவிரப் பொதுவாழ்வில் பிஸியாக இருக்கும் முதல்வர், தனது குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிட்ட இந்த அழகான தருணம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ள முதல்வர் ரேவந்த் ரெட்டி, “தாத்தா… நீங்க பூரி சுட்டுக் கொடுத்தாத்தான் நான் சாப்பிடுவேன்” என்று எனது பேரன் ரேயான்ஷ் அடம் பிடித்தால் என்னால் எப்படி மறுக்க முடியும்? என்று பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், சுமார் மூன்று வயதான அவரது பேரன் சமையலறை மேடையில் அமர்ந்திருக்க, முதல்வர் மாவை உருட்டி, சூடான எண்ணெயில் பூரிகளை சுட்டுக் கொடுக்கிறார். அப்போது, “இது உனக்கு போதுமா?” என்று முதல்வர் கேட்க, “பாட்டிக்கும் சேர்த்து பூரி சுட்டுக் கொடுங்கள்” என்று அந்தச் சிறுவன் மழலை மொழியில் கூறுவது பார்ப்பவர்களை ரசிக்க வைத்துள்ளது.
தொடர்ந்து தனது பதிவில் நெகிழ்ந்த முதல்வர், “பக்கத்தில் பேரன், கையில் ஒரு பிடி மாவு, சுற்றிலும் சிரிப்பொலி, அத்தனை வடிவமாக இல்லாத ஒரு டஜன் பூரிகள்… பிஸியான மக்கள் வாழ்க்கைக்கு மத்தியில், பேரனுடன் பூரி சுட்டுக்கொண்டு கழித்த இந்த சில நிமிடங்கள் என் வாழ்வின் இனிமையான நினைவுகளாக மாறிவிட்டன” என்று குறிப்பிட்டுள்ளார். தீவிர அரசியலில் இருந்து சற்று ஓய்வெடுத்து, ஒரு சாதாரண தாத்தாவாகத் தனது பேரனின் ஆசையை நிறைவேற்றிய முதல்வரின் இந்த எளிய மற்றும் பாசமான குணம் இணையவாசிகளின் இதயங்களை வென்று பாராட்டுக்களைக் குவித்து வருகிறது.
