LATEST NEWS
CM விஜய் பதிலுரைக்கு 2 நாள் முன்பு வைக்கப்பட்ட குறி..! விஜய்யின் கையில் இருக்கும் ‘மூன்று கோப்புகள்’… முதல் விக்கெட்டாக சிக்கிய கே.என்.நேரு? பேரவையில் வெடிக்கப்போகும் அரசியல் அனல்..!!
தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் திங்கட்கிழமை பதிலுரை வழங்க உள்ளார். இதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக, திமுகவின் முதன்மைச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேருவுக்கு சொந்தமான 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை நடத்தியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திங்கட்கிழமை சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் பதிலளிக்கும் போது, சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை முன்வைத்து அவருக்கு கடுமையான அரசியல் நெருக்கடி கொடுக்க திமுக திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், கோட்டை வட்டாரத்தில் உலா வரும் தகவல்களின்படி, திமுகவின் சட்டமன்ற வியூகத்தை முறியடிக்கும் மற்றும் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் ஒரு தற்காப்பு நடவடிக்கையாகவே இந்த ரெய்டு நடத்தப்பட்டுள்ளதாகப் பேசப்படுகிறது. சட்டமன்றத்தில் கடந்த முறை முதலமைச்சர் விஜய் பேசுகையில், முந்தைய ஆட்சியின் ஊழல்கள் குறித்த மூன்று முக்கிய கோப்புகள் தன் வசம் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். அதன் தொடர்ச்சியாக, நகராட்சி நிர்வாகத் துறையில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக தற்போது கே.என்.நேரு குறிவைக்கப்பட்டுள்ளார் என்றும், சட்டமன்றத்தில் திமுக எழுப்பவிருக்கும் கேள்விகளுக்கு இந்த ரெய்டு விவகாரத்தை வைத்தே முதலமைச்சர் விஜய் பதிலடி கொடுப்பார் என்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
