LATEST NEWS
அடடே..! 2 மாணவிகளின் கல்விக்காக… சிறுத்தை, கரடி நடமாடும் அடர்ந்த காட்டில் தினமும் 5 கி.மீ மலைப்பயணம்… உயிரையும் பொருட்படுத்தாமல் நடந்து செல்லும் அரசுப் பள்ளி ஆசிரியர்.. பாராட்டும் இணையவாசிகள்..!!
மராட்டிய மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய மலைக்கிராமத்தில், இரண்டு மாணவிகளின் கல்விக்காக அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் காட்டும் அர்ப்பணிப்பு அனைவரது நெஞ்சையும் நெகிழ வைத்துள்ளது. ககன்பவ்டா தாலுகாவில் உள்ள காவல்டெக் தங்கர்வாடா என்ற அந்த கிராமத்தில் வெறும் மூன்று வீடுகள் மட்டுமே உள்ளன. அங்கு மின்சாரமோ, முறையான சாலை வசதியோ இல்லாத நிலையிலும், அங்கு வசிக்கும் 8 வயது மற்றும் 5 வயதுடைய இரு சகோதரிகளின் படிப்பு நின்றுவிடக் கூடாது என்பதற்காக ஜீவன் மிதாரி என்ற ஆசிரியர் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளார்.
அந்தப் பள்ளிக்குச் செல்ல மோட்டார் சைக்கிள் கூட பயன்படுத்த முடியாத அளவுக்குப் பாதை மிகவும் கரடுமுரடாக உள்ளது. இதனால், ஆசிரியர் ஜீவன் மிதாரி தினமும் 5 கிலோமீட்டர் தூரம் அடர்ந்த காட்டு வழியே ஆபத்தான மலைப்பாதையில் நடந்து சென்று அந்த மாணவிகளுக்குப் பாடம் கற்பித்து வருகிறார். மீண்டும் மாலையில் அதே பாதையில் 5 கிலோமீட்டர் நடந்து அவர் தனது இருப்பிடத்திற்குத் திரும்புகிறார்.
அவர் கடந்து செல்லும் அடர்ந்த காட்டுப்பகுதியில் காட்டெருமைகள், சிறுத்தைகள், கரடிகள் போன்ற வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும் சூழலிலும், தன்னுயிரையும் பொருட்படுத்தாமல் மாணவிகளின் எதிர்காலத்திற்காக அவர் தினமும் இந்த ஆச்சரியப் பயணத்தை மேற்கொள்கிறார். ஆசிரியர் தினத்தை ஒட்டி, ஒட்டுமொத்த ஆசிரியர் சமூகத்திற்கும் முன்மாதிரியாகத் திகழும் அவரது இந்த அசாத்திய அர்ப்பணிப்பைப் பாராட்டி இணையத்தில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
