LATEST NEWS
அய்யோ காப்பாத்துங்க… ஜன்மாஷ்டமி விழாவில் அலறிய பக்தர்கள்… எரியும் சிலிண்டரை கைகளால் தூக்கி வீசிய கான்ஸ்டபிள்… ஒரு நொடியில் நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றிய ‘நிஜ ஹீரோ’…! ஜெய்ப்பூர் இஸ்கான் கோவிலில் நடந்த திரில் சம்பவம்..!!
ஜெய்ப்பூரின் முஹானா பகுதியில் உள்ள இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களின் போது, வளாகத்தில் இருந்த ஒரு கேஸ் சிலிண்டரில் திடீரென தீப்பிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தீ வேகமாக விஐபி பந்தல் பகுதியை நோக்கிப் பரவியதால், அங்கிருந்த ஏராளமான பக்தர்களுக்கு பெரும் ஆபத்து உருவானது. அந்த சமயத்தில் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த முஹானா காவல் நிலையத்தைச் சேர்ந்த கான்ஸ்டபிள் கான் சிங் என்பவர், துணிச்சலுடன் செயல்பட்டு தீப்பிடித்த சிலிண்டரை ஆபத்தான பகுதியிலிருந்து வெளியே தூக்கி வீசினார்.
கான்ஸ்டபிள் கான் சிங்கின் இந்தத் துரிதமான செயலால், அருகில் இருந்த மற்ற கேஸ் சிலிண்டர்களுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டு, நேரிடவிருந்த பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தனது உயிரைப் பொருட்படுத்தாமல் தீப்பிழம்புகளுக்கு நடுவே இறங்கி பக்தர்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல உதவிய அவரது தைரியத்தையும் சமயோசித புத்தியையும் அங்கிருந்த பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர், தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன் லால் சர்மா ஜன்மாஷ்டமி வழிபாட்டிற்காக அதே இஸ்கான் கோயிலுக்கு வருகை தருவதற்கு சில மணி நேரத்திற்கு முன்புதான் இந்தத் தீ விபத்து நிகழ்ந்தது. காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையின் ஒருங்கிணைந்த செயலால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்ட போதிலும், முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு கோயில் வளாகத்தில் பாதுகாப்பும் கண்காணிப்பும் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளன.
