LATEST NEWS
“IAS ஆவதற்கு முன்பு.. இதுதான் முக்கியம்”.. பெண் அதிகாரிகளுக்கு ஆளுநர் கொடுத்த அதிர்ச்சி அட்வைஸ்..!!
கான்பூர் சத்திரபதி ஷாகு ஜி மகாராஜ் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், பெண்கள் ஐஏஎஸ் அதிகாரியாகவோ அல்லது ஆசிரியராகவோ உயர்வதை விடவும், ஒரு சிறந்த தாயாக உருவெடுப்பதற்கே தங்களின் முதல் முக்கியத்துவத்தை அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். பெண்களின் தொழில்முறை வெற்றி என்பது குடும்பப் பொறுப்புகளைத் தியாகம் செய்துவிட்டு வரக் கூடாது என்று குறிப்பிட்ட அவர், வீட்டில் எப்படிச் சமைக்க வேண்டும் என்பது ஆண், பெண் என அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், திருமணத்திற்குப் பின் பெண் பிள்ளைகள் தங்களது கல்வியை நிறுத்திவிடாமல், தங்களது அறிவையும் திறமையையும் தேசக் கட்டமைப்பிற்குப் பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மொத்தம் 1,07,713 மாணவர்களுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்ட இந்த விழாவில், பதக்கங்களை வென்றவர்களில் கிட்டத்தட்ட 82 சதவீதம் பேர் மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத்தின் முன்னாள் முதலமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவருமான ஆனந்திபென் படேல், இதற்கு முன்னதாக நடந்த ஏபிஜே அப்துல் கலாம் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிலும் திருமணம் மற்றும் சுயசார்பு குறித்துப் பேசியிருந்தார். இப்போதெல்லாம் குடும்பங்கள் குழந்தைகளின் காதலை மறுப்பதால், இளம் வயதினர் வீட்டை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்துகொள்வதாகவும், அவ்வாறு பிறக்கும் குழந்தைகள் போதிய பராமரிப்பின்றி அரசின் வசம் விடப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். எனவே, காதலிப்பவர்கள் திருமணத்திற்கு முன்பாகத் தங்களது காலில் சொந்தமாக நிற்க வேண்டும் என்றும், முழுமையான சுயசார்பு அடைந்த பிறகே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றும் அவர் அந்தப் பேச்சில் அறிவுறுத்தியிருந்தார்.
