CRIME
“20 ஆண்டு கால சொத்து தகராறு…” நீதிமன்றத் தீர்ப்பால் தாய், மகனுக்கு நேர்ந்த கொடூரம்.. சடலத்தின் அருகில் அமர்ந்து கொலையாளி செய்த பகீர் காரியம்.. திடுக்கிடும் பின்னணி..!!
கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் ஹானகல் தாலுகா கூசனூர் கிராமத்தில், சொத்து தகராறு காரணமாகத் தாயும் மகனும் நடுரோட்டில் கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. சிர்சியில் உள்ள கர்நாடக மின்சார வாரியத்தில் பணியாற்றி வந்த பிரேமா படிகேர் (55) மற்றும் புகைப்படக் கலைஞரான அவரது மகன் அவினாஷ் படிகேர் (35) ஆகிய இருவருமே இந்த வெறிச்செயலுக்குப் பலியானவர்கள் ஆவர். கூசனூர் கிராமத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட சொத்து தொடர்பாகப் பிரேமாவிற்கும், அதே பகுதியைச் சேர்ந்த திரகய்யா மற்றும் பசவராஜ் ஆகியோருக்கும் இடையே கடந்த 20 ஆண்டுகளாகப் பகை நீடித்து வந்துள்ளது. ஊர்ப் பெரியவர்கள் நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில் வழக்கு நீதிமன்றத்திற்குச் சென்றது. அண்மையில் இந்த வழக்கில் நீதிமன்றம் பிரேமா மற்றும் அவினாஷிற்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தது.
நீதிமன்ற உத்தரவின்படி தங்களுக்குச் சாதகமான சொத்தைக் கையகப்படுத்துவதற்காகத் தாயும் மகனும் கூசனூர் கிராமத்திற்கு வந்தபோது, சாலையில் வைத்து எதிர்தரப்பினர் அவர்களை வழிமறித்துச் சரமாரியாகத் தாக்கி கொடூரக் கொலை செய்தனர். இந்த இரட்டைக் கொலையை அரங்கேற்றிய அந்தக் கும்பல், சற்றும் பயமோ மனிதாபிமானமோ இன்றி, ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்த உடல்களின் அருகிலேயே அமர்ந்து நிதானமாக உணவு சாப்பிட்டதாகக் கூறப்படும் திடுக்கிடும் தகவல் ஒட்டுமொத்தப் பகுதியையும் உலுக்கியுள்ளது. இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த ஹாவேரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP) யசோதா வந்தகோடி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். தற்போது போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள கொலையாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
