LATEST NEWS
மூளையில் ரத்தக்கசிவு… மண்டையோடு நீக்கம்…! பாலஸ்தீன ஊடகவியலாளருக்கு நேர்ந்த கொடூரம்… உலகை உலுக்கும் புகைப்படங்கள்..!!
இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பாலஸ்தீனக் கைதிகள் எதிர்கொள்ளும் கொடூரமான சித்திரவதைகளுக்குச் சாட்சியாக பாலஸ்தீனப் பத்திரிகையாளர் முஜாஹித் பானி முப்லிஹ் என்பவரின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உலகையே உலுக்கியுள்ளன. மூன்று குழந்தைகளின் தந்தையான இவர், கடந்த 2025 ஜூன் மாதம் எந்தவித விசாரணையுமின்றி இஸ்ரேலின் நிர்வாகக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டார். அவர் கைது செய்யப்படுவதற்கு முன்பு நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் ஒரு புகைப்படமும், சிறைவாசத்திற்குப் பிறகு அடையாளம் தெரியாத அளவுக்கு மிக மோசமான உடல்நலக் குறைபாட்டுடன் இருக்கும் மற்றொரு புகைப்படமும் ஒப்பிடப்பட்டு வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2026 ஜனவரியில் இஸ்ரேல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட இரண்டே நாட்களில், சிறையில் அளிக்கப்பட்ட தொடர் சித்திரவதைகள் மற்றும் மருத்துவப் புறக்கணிப்பு காரணமாக முப்லிஹிற்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு அவசர அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு, மண்டையோட்டின் ஒரு பகுதி நீக்கப்பட்ட நிலையில் தற்போது படுத்த படுக்கையாகத் தீவிர சிகிச்சையில் இருந்து வருகிறார். சிறையில் மனித வாழ்வின் மிக அடிப்படையான தேவைகளான உணவும், தண்ணீரும் மறுக்கப்பட்டதாகவும், பசி மற்றும் அவமானத்தின் உச்சத்தைக் கண்டதாகவும் கண்ணீருடன் விவரித்துள்ள முப்லிஹ், தன் கண் முன்னாலேயே சக கைதிகள் இருவர் சித்திரவதையால் துடிதுடித்து மரணமடைந்ததையும் நேரில் பார்த்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2023 அக்டோபரில் காசா போர் தொடங்கியதில் இருந்து, அங்கு நடக்கும் உண்மைச் சம்பவங்கள் உலகிற்குத் தெரியாமல் மறைப்பதற்காக, இஸ்ரேல் ராணுவம் இதுவரை சுமார் 245 பாலஸ்தீனப் பத்திரிகையாளர்களைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இஸ்ரேல் சிறைகளில் உள்ள ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் தினசரி பட்டினி, உடல் மற்றும் மன ரீதியான அத்துமீறல்களை எதிர்கொண்டு வரும் நிலையில், சர்வதேச ஊடகவியலாளர்கள் மற்றும் கைதிகள் மீது இஸ்ரேல் நிகழ்த்தி வரும் இந்த மனித உரிமை மீறல்களுக்குப் பல்வேறு சர்வதேச அமைப்புகள் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றன.
