LATEST NEWS
“1995-இல் ஜெ… 2026-இல் விஜய்…” வேலூர் கோட்டை மர்மத்தை தோண்டி எடுத்து சவால் விடும் ஸ்டாலின்… அதே பாணியில் தவெக அரசுக்கு விழுந்த பலத்த அடி..!!
1995-ஆம் ஆண்டு வேலூர் கோட்டை சிறையிலிருந்து தப்பியோடியவர்கள் அஇஅதிமுக கைதிகள் அல்ல, அவர்கள் எல்.டி.டி.இ (LTTE) இயக்கத்தினர் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தற்பொழுது தெளிவுபடுத்தியுள்ளார். வேலூர் கோட்டையில் உள்ள திப்பு மஹாலில் சிறப்புத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த 43 எல்.டி.டி.இ கைதிகள் ஒரே நேரத்தில் தப்பியோடிய அந்த வரலாற்றுச் சம்பவத்தை, அண்மையில் நடந்த தேனி சிறை உடைப்பு விவகாரத்தோடு ஒப்பிட்டு அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 1995-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14-ஆம் தேதி நள்ளிரவில் இந்தத் துணிகரச் சம்பவம் அரங்கேறியது. சிறையின் உள்ளே இருந்து சுமார் 10 அடி ஆழத்தில், 153 அடி நீளத்திற்கு மிக ரகசியமாகச் சுரங்கப்பாதை தோண்டிய கைதிகள், கோட்டையைச் சுற்றியிருந்த ஆபத்தான முதலைகள் நிறைந்த அகழியையும் கடந்து தப்பியோடினர். சுரங்கம் தோண்டியபோது அள்ளப்பட்ட டன் கணக்கிலான மண்ணை அவர்கள் எங்குதான் கொண்டு போய் ஒளித்து வைத்தார்கள் என்ற மர்மத்திற்கு இன்றளவும் விடை தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்புப் படைவளையங்கள் நிறைந்த வேலூர் கோட்டையிலேயே கைதிகள் சுரங்கம் தோண்டித் தப்பியது, அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அஇஅதிமுக அரசுக்குப் பெரும் அரசியல் நெருக்கடியையும் சர்வதேச அளவில் சட்டம் ஒழுங்கு விமர்சனத்தையும் ஏற்படுத்தியது. தற்போது அதே பாணியில் தேனி சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பியோடியிருப்பது, முந்தைய அஇஅதிமுக ஆட்சிக் காலத்துப் பாதுகாப்புத் தோல்வியை தற்போதைய தவெக அரசுக்கு நினைவூட்டும் விதமாக அமைந்துள்ளது என்று ஸ்டாலின் தனது விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளார்.
