LATEST NEWS
பூமிக்கு அடியில் 100 மீட்டர் ஆழத்தில் ரகசிய அணு உலை… பறக்கத் தயாராகும் GBU-57 அதிபயங்கர குண்டுகள்.. ட்ரம்பின் ஸ்கெட்ச்சை முறியடிக்குமா ஈரான்..? சர்வதேச அளவில் பதற்றம்..!!
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானின் கட்டுமானத்தில் உள்ள ‘பிக்ஆக்ஸ் மவுண்டன்’ அணுசக்தி தளத்தின் மீது மிக விரைவில் குண்டுவீசித் தாக்குதல் நடத்தப் போவதாகப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் இரு நாடுகளும் பரஸ்பரம் ராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் இக்கட்டான சூழலில் இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது. தலைநகர் தெஹ்ரானில் இருந்து தெற்கே 220 கி.மீ தொலைவில் உள்ள நடன்ஸ் அணு உலைக்கு மிக அருகில், மலையின் மிக ஆழமான பகுதியில் இந்த ரகசியத் தளம் அமைக்கப்பட்டு வருகிறது.
ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ட்ரம்ப், ஈரான் தனது அதிநவீன யுரேனியம் செறிவூட்டும் மையங்களை இந்த மலைக்கு அடியில் மாற்றியிருக்கலாம் என்று ஒப்புக்கொண்டார். “மிக விரைவில் நாங்கள் அந்தப் பகுதியைத் தாக்கப் போகிறோம், எங்களால் அதைச் செய்ய முடியும்” என்று அவர் மிரட்டல் விடுத்துள்ளார். ஐநா சபையின் சர்வதேச அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு இதுவரை இந்த இடத்தைப் பார்வையிட அனுமதி பெறாததால், அங்கு தற்பொழுது என்னென்ன அணுசக்தி உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளன என்பது உலக நாடுகளுக்கு இன்னும் மர்மமாகவே நீடிக்கிறது.
விமான எதிர்ப்புப் படைகள் மற்றும் ஈரானின் புரட்சிகரக் காவல்படையினரின் (Revolutionary Guard) கடுமையான பாதுகாப்பில் உள்ள இந்தத் தளம், பூமிக்கு அடியில் சுமார் 100 மீட்டர் ஆழத்தில் கட்டப்பட்டுள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு நடன்ஸ் அணுமின் நிலையத்தில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஏற்பட்ட கடுமையான சேதங்களைத் தொடர்ந்து, தங்களின் மிக முக்கியமான மற்றும் உணர்திறன் மிக்க அணு உலைகளைப் பாதுகாப்பதற்காகவே ஈரான் இந்த நிலத்தடி கட்டுமானத்தைத் தொடங்கியது. செயற்கைக்கோள் படங்களின் மூலம் இந்த மலைக்குச் செல்லும் பல ரகசியப் பாதைகள் தற்பொழுது கண்டறியப்பட்டுள்ளன.
பூமிக்கு அடியில் 60 மீட்டர் வரை ஊடுருவிச் சென்று வெடிக்கக்கூடிய ‘GBU-57’ எனப்படும் அதிபயங்கரப் குண்டுகளை அமெரிக்கா இதற்காகவே தயாரித்துள்ளது. இத்தகைய இரண்டு சக்திவாய்ந்த குண்டுகளை அடுத்தடுத்து ஒரே இடத்தில் வீசித் தாக்க அமெரிக்க ராணுவம் திட்டமிட்டுள்ள போதிலும், 100 மீட்டர் ஆழத்தில் உள்ள இந்த பிக்ஆக்ஸ் தளத்தை அமெரிக்காவால் முழுமையாக அழிக்க முடியுமா என்ற சந்தேகம் ராணுவ வல்லுநர்களிடையே தற்பொழுது ஒரு பெரிய கேள்விக் குறியாகவே எழுந்துள்ளது.
