LATEST NEWS
இது எங்கள் குழந்தை… யாருடைய குழந்தையும் கிடையாது…! முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானத்தால் சட்டசபையில் வெடித்த காரசார விவாதம்..!!
தமிழ்நாடு சட்டசபையில் இன்றைய நிகழ்வில் வினாக்கள்-விடை நேரத்தைத் தொடர்ந்து, 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் 3 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக்கக் கோரி முதலமைச்சர் விஜய் தனித்தீர்மானத்தைக் கொண்டு வந்து பேசினார். இந்தத் தனித்தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.
தீர்மானத்தின் மீது பேசிய திமுக எம்எல்ஏ ரகுபதி, தமிழ் வழக்காடு மொழி என்பதற்கு பிள்ளையார் சுழி போட்டவரும், தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தைப் பெற்றுத் தந்தவரும் கருணாநிதி தான் என்று சுட்டிக்காட்டினார். மேலும், சென்னையில் உச்சநீதிமன்றக் கிளை அமைக்கக் கோரியதும், 2022-ல் பிரதமரிடம் நேரடியாக தைரியமாக குரல் எழுப்பி உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கக் கேட்டதும் ஸ்டாலின் தான் எனக் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், “இந்த தீர்மானம் எங்கள் குழந்தை, இதை வரவேற்கிறோம்; மக்கள் நேரலையில் பார்த்துக்கொண்டிருப்பதால் வரலாறு முக்கியம்” என்று தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்து அமைச்சர் நிர்மல் குமார் பேசுகையில், வெறும் கோரிக்கை விடுப்பது மட்டும் வரலாறு ஆகிவிடாது என்றும், எப்போது செயல்வடிவத்திற்கு வந்து யார் செயல்படுத்துகிறார்களோ அதுதான் வரலாறு என்றும் கூறினார். இதுவரை ஆயிரம் கோரிக்கைகள் வந்திருக்கலாம் எனக் குறிப்பிட்ட அவர், இது யாருடைய குழந்தையும் கிடையாது என்று உரையாற்றினார்.
