CRIME
“ஐயோ என் புருஷன் செத்துட்டாரே” புடவை வாங்கித் தராத கணவன்… உயிரை எடுத்த பிரஷர் குக்கர் மூடி.. விபத்து என நாடகமாடிய மனைவி… போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் உடைந்த பகீர் உண்மை..!!
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில், தனக்குப் புடவை வாங்கித் தராததால் ஏற்பட்ட கடுமையான குடும்பத் தகராறில், கணவரை பிரஷர் குக்கர் மூடியால் அடித்துக் கழுத்தை நெரித்துக் கொலை செய்த 30 வயது மனைவி போலீஸாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். பீகார் மாநிலம் ரோஹ்தாஸ் மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சுனிதாதேவி ஹரிராம் சிங் என்ற அந்தப் பெண், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று காவல்துறையினரால் சிறையிலடைக்கப்பட்டார்.
கடந்த ஜூலை 19 அன்று பத்லாபூர் கிழக்கு பகுதியில் உள்ள தங்களது வீட்டில் இருந்தபோது, கணவர் ஹரிராம் கிஷன்ஜி சிங் (35) தனக்குப் புடவைகள் வாங்கி வராதது குறித்து சுனிதாதேவி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த வாக்குவாதம் முற்றியதில் ஏற்பட்ட கடும் ஆத்திரத்தில், வீட்டில் இருந்த பிரஷர் குக்கரின் மூடியை எடுத்து கணவரைக் கொடூரமாகத் தாக்கியதுடன், அவரது கழுத்தை நெரித்துக் கொலையும் செய்துள்ளார். கொலைக்குப் பின், தனது கணவர் விபத்து காரணமாகவே உயிரிழந்தார் என்று கூறி போலீஸாரை திசைதிருப்பவும் அவர் முயன்றுள்ளார்.
முதலில் இதனை விபத்து மரணம் என்றே போலீஸார் பதிவு செய்திருந்த நிலையில், அரசு மருத்துவமனையில் இருந்து வந்த உடற்கூறாய்வு அறிக்கை இந்த வழக்கில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. அவர் கழுத்து நெரிக்கப்பட்டு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாலேயே கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளார் என்பதை மருத்துவ அறிக்கை உறுதிப்படுத்தியது. தொடர்ந்து நில உரிமையாளர் மற்றும் உறவினர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சுனிதாதேவி மாட்டிக்கொண்டார். தற்பொழுது உள்ளூர் நீதிமன்றம் அவரைக் காவல் துறையின் கட்டுப்பாட்டில் எடுத்து விசாரிக்க வரும் ஜூலை 29 வரை அனுமதி வழங்கியுள்ளது.
