CINEMA
சென்சார் மோதல் டூ படம் லீக்…!”படம் ரிலீஸ் ஆகுமா, ஆகாதா…!சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கு பின் ரிலீஸாகும் ‘ஜனநாயகன்’… விஜய்யின் கடைசி படத்திற்கு க்ரீன் சிக்னல் கொடுத்ததா சென்சார்…!
தமிழக அரசியலில் தடம் பதித்து, தற்போது தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய் நடிப்பில், ஹெச். வினோத் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜனநாயகன்’. விஜய்யின் திரையுலகப் பயணத்தின் இறுதிப் படமாக கருதப்படும் இதில் பூஜா ஹெக்டே கதாநாயகியாகவும், பாபி தியோல் வில்லனாகவும், மமிதா பைஜூ முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். கேவிஎன் புரொடக்ஷன்ஸ் (KVN Productions) தயாரித்துள்ள இத்திரைப்படம், சென்சார் சான்றிதழ் சிக்கலில் தொடங்கி இணையத்தில் முழுப் படமும் கசிந்தது வரை, இதுவரை எந்தவொரு தமிழ் சினிமாவும் சந்திக்காத பலத்த சோதனைகளையும் பஞ்சாயத்துகளையும் எதிர்கொண்டுள்ளது.
விஜய் அரசியலுக்குச் சென்றதால் தங்களின் ‘தளபதி’யை வெள்ளித்திரையில் காணும் கடைசி வாய்ப்பு இது என ரசிகர்கள் இந்தப் படத்தை ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர். கடந்த ஜனவரி மாதமே படத்தை வெளியிட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்ட நிலையில், சென்சார் அதிகாரிகள் சான்றிதழ் தர மறுத்ததால் ரிலீஸ் தள்ளிப்போனது. இதனை எதிர்த்து தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தை நாடியும் சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லை. இதையடுத்து வழக்கு வாபஸ் பெறப்பட்டு, மறு தணிக்கைக்கு அனுப்பப்பட்டும் இழுபறி நீடித்தது. இந்தச் சூழலில், படம் இன்னும் சென்சார் செய்யப்படாத நிலையிலேயே சில மாதங்களுக்கு முன்பு இணையத்தில் முழுமையாக லீக்காகி ஒட்டுமொத்த படக்குழுவிற்கும், ரசிகர்களுக்கும் பேரிடியாக அமைந்தது.
இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், படக்குழுவினர் கொதித்தெழுந்த போதும், விஜய் இறுதிவரை அமைதி காத்தார். இதற்கிடையே நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று விஜய் முதலமைச்சராகவும் பதவியேற்றுள்ளார். இதனால், இனி ‘ஜனநாயகன்’ ரிலீஸாவதில் எந்தச் சிக்கலும் இருக்காது என நம்பப்படுகிறது. மேலும், படத்தின் டைட்டில் கார்டில் ‘தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்’ என்று போடப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்த வேளையில், அதற்கு மாறாக, எப்போதும் போல ‘தளபதி’ என்றே குறிப்பிடுமாறு தயாரிப்பு நிறுவனத்திற்கு விஜய் அறிவுறுத்தியுள்ளதாக வெளியாகும் தகவல், பொது மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
இந்நிலையில், படத்தின் ரிலீஸ் எப்போது என்ற கேள்விக்கு விடை அளிக்கும் விதமாக, ‘ஜனநாயகன்’ படத்தின் தயாரிப்பாளர் நேற்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மன அமைதிக்காகவே முதன்முறையாக இந்த கோயிலுக்கு வந்து இறைவனின் ஆசி பெற்றேன். ‘ஜனநாயகன்’ படத்திற்கு இன்னும் சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை; ஆனால் எப்போது வேண்டுமானாலும் கிடைத்துவிடும் என்ற நிலை உள்ளது. சான்றிதழ் கிடைத்தவுடன் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும். அது கூடிய விரைவில் நடக்கும். விஜய் முதலமைச்சரானது எனக்குப் பெரும் மகிழ்ச்சி” என்று கூறி ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்புக்கு நம்பிக்கை அளித்துள்ளார்.
