CINEMA
“ஜனநாயகன்” லீக்…. கோர்ட்டில் ஏறிய தயாரிப்பாளர்…! இணையத்திருட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்குமா நீதிமன்றம்…?
நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ தணிக்கை குழுவின் சிக்கல்களால் தாமதமான நிலையில், திடீரென இணையதளத்தில் கசிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணுவம் மற்றும் மத நல்லிணக்கம் தொடர்பான காட்சிகள் குறித்து சென்சார் போர்டு எழுப்பிய ஆட்சேபனையால், படம் மறுஆய்வுக் குழுவின் பரிசீலனையில் இருந்தது. இந்தச் சூழலில் படம் சட்டவிரோதமாக வெளியானதால் அதிர்ச்சியடைந்த தயாரிப்பு நிறுவனம், சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்னிலையில் அவசரமாக முறையீடு செய்தது. இந்த விவகாரம் குறித்து முறையான மனுத்தாக்கல் செய்தால் விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிமன்றம் உறுதியளித்துள்ளது.
முன்னதாக பொங்கல் வெளியீடாகத் திட்டமிடப்பட்ட இப்படம், தணிக்கைச் சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்ட சட்டப் போராட்டங்களால் தள்ளிப்போனது. தனி நீதிபதியின் உத்தரவு மற்றும் இரு நீதிபதிகள் அமர்வின் மேல்முறையீடு எனப் பல கட்டங்களைக் கடந்த இந்தப் படம், இறுதியாகத் தணிக்கைக் குழுவின் முடிவிற்காகக் காத்திருந்தது. தற்போது இணையத்தில் படம் கசிந்துள்ளதால் படக்குழுவினருக்குப் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. சட்டவிரோதமாகப் படத்தைப் பகிர்ந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரியும், இணைய இணைப்புகளை முடக்கக் கோரியும் தயாரிப்புத் தரப்பு நீதிமன்றத்தை நாடியுள்ளது.
