LATEST NEWS
ஒரே நாளில் ரூ.100 கோடி நஷ்டம்…!! எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள இருங்காட்டுக் கோட்டை சிப்காட் வளாகத்தில் மின்னணு உதிரிபாகங்களைத் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இன்று வழக்கம்போல் தொழிலாளர்கள் அனைவரும் தங்களது வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்த சமயத்தில், அந்த ஆலையின் சேமிப்புக் கிடங்கில் எதிர்பாராதவிதமாகத் திடீரென தீப்பற்றிக் கொண்டது.
விபத்து நேர்ந்த உடனே உஷாரான நிர்வாகத்தினர், அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் அனைவரையும் எவ்வித பாதிப்புமின்றி தொழிற்சாலையிலிருந்து பத்திரமாக வெளியேற்றினர். இதனால் நல்வாய்ப்பாகப் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும், தீயானது கட்டுக்கடங்காமல் மின்னல் வேகத்தில் தொழிற்சாலையின் பிற பிரிவுகளுக்கும் பரவியது. இதனால் ஏற்பட்ட அடர்ந்த கரும்புகை சிப்காட் தொழிற்பேட்டை பகுதி முழுவதையும் சூழ்ந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் அச்சமும் நிலவியது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை மற்றும் படப்பை ஆகிய பகுதிகளின் தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடித் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் சுமார் நூறு கோடி ரூபாய் மதிப்புடைய எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமாகின. இக்கோர விபத்து குறித்து ஒரகடம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
