LATEST NEWS
திருச்சியில் நடுரோட்டில் சுருண்டு விழுந்த சிறுமி…என்னைச் சுற்றி பல ஆண்கள் இருந்தாங்க…சொந்த தங்கையையே காட்டிக் கொடுத்தாரா திருநங்கை அக்கா…சிறுமிக்கு தீவிர சிகிச்சை… திருச்சியில் பதற்றத்தை ஏற்படுத்திய ‘அந்த’ 2 மணி நேரம்…!
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநரான மாரீசெல்வன் (43), திருச்சியில் உள்ள கல்மந்தை காலனிப் பகுதியில் வசிக்கும் தனது தோழியான திருநங்கை ஆதிரா என்பவரைப் பார்ப்பதற்காகச் சென்றுள்ளார். அங்குப் பேசிவிட்டுத் திரும்பும்போது, ஆதிராவின் தங்கை கடைக்குச் செல்லத் தயாராக இருந்ததால், மாரீசெல்வன் அவரைத் தனது காரில் ஏற்றிச் சென்றுள்ளார். மாலை 6:30 மணி அளவில் திருச்சி கீரைக்கடை பஜார் பகுதியில் அந்தச் சிறுமியை அவர் காரில் இருந்து இறக்கிவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. கார் சென்ற சிறிது நேரத்திலேயே அந்தச் சிறுமி சுயநினைவின்றி தட்டுத்தடுமாறி சாலையில் விழுந்துள்ளார். இதனைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், போதை தலைக்கேறிய நிலையில் இருந்த சிறுமியை மீட்டு திருச்சி அரசு பொது மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவத்தால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள், இரவு 7:30 மணி அளவில் மீண்டும் அதே பகுதிக்கு வந்த கார் ஓட்டுநர் மாரீசெல்வனைப் பிடித்துச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். பொதுமக்களின் இந்தத் தாக்குதலில் மாரீசெல்வனுக்கு மண்டை உடைந்து பலத்த காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையே, தங்களது மகளுக்கு நேர்ந்த கொடுமையைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோரும் உறவினர்களும் திருச்சி அரசு மருத்துவமனை முன்பு திரண்டு, குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை வழங்கக் கோரியும், சிறுமியைப் பார்க்க அனுமதிக்கக் கோரியும் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தற்போது வரை அந்தச் சிறுமி சுயநினைவின்றி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் சிறுமியைப் பார்த்துவிட்டு வெளியே வந்த அவரது சித்தி, “சிறுமிக்கு ஜூஸில் ஏதோ மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளனர்; தன்னைச் சுற்றி பல ஆண்கள் இருந்ததாகச் சிறுமி கூறினார்” எனத் தெரிவித்துள்ளார். இதனால் இச்சம்பவத்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை நடந்திருக்க வாய்ப்பிருப்பதாகவும், இதற்குச் சிறுமியின் அக்காவான திருநங்கையும் ஒரு காரணமாக இருக்கலாம் என்பதால் அவரையும் கைது செய்ய வேண்டும் என்றும் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இச்சம்பவம் குறித்து காந்தி மார்க்கெட் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, சிறுமிக்கு நேர்ந்தது பாலியல் வன்கொடுமையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
