LATEST NEWS
தோட்டத்து கிணற்றில் மிதந்த அழுகிய சடலம்…பாசமா பழகிய நண்பன் தான்…ஒரே ஒரு ‘வாக்குவாதம்’…மொத்தமாக முடிந்த வாழ்க்கை…நீ எப்படி என் தங்கச்சிய லவ் பண்ணுவ?” – நண்பனை வரவழைத்து கொடூரம்.. காரமடையில் அதிர்ச்சி பின்னணி…!
கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை அருகே உள்ள மருதூர் கிராமத்தில், நண்பனின் தங்கையைக் காதலித்த விவகாரத்தில் எலக்ட்ரீஷியன் ஒருவர் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டு, சடலம் கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருதூர் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் என்ற எலக்ட்ரீஷியனும், அதே பகுதியைச் சேர்ந்த பாரதிராஜா என்பவரும் நெருங்கிய நண்பர்களாகப் பழகி வந்துள்ளனர். பாரதிராஜாவின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்த கண்ணனுக்கும், அவரது தங்கைக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இவர்களின் காதலை அறிந்த பாரதிராஜா, பலமுறை எச்சரித்தும் கண்ணன் காதலைக் கைவிட மறுத்ததால், இருவருக்கும் இடையே கடும் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.
காதல் விவகாரத்தால் ஆத்திரமடைந்த பாரதிராஜா, தனது நண்பனான கண்ணனைத் தீர்த்துக் கட்ட முடிவு செய்து திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி, கடந்த ஜூன் 11-ஆம் தேதி பாரதிராஜாவின் நண்பர்களான வசந்தகுமார் மற்றும் மணிகண்டன் ஆகியோர் கண்ணனை நியூ அம்மன் நகர் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்து வீட்டிற்குத் தனியாக வரவழைத்துள்ளனர். அங்கு ஏற்கனவே காத்திருந்த பாரதிராஜா, ருத்தீஷ், நசீர் உசேன் ஆகியோர் கண்ணனிடம் காதலைக் கைவிடுமாறு கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஏற்பட்ட மோதலில், அவர்கள் அனைவரும் சேர்ந்து கண்ணனைச் சரமாரியாகத் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர், கொலையை மறைப்பதற்காகக் கண்ணனின் உடலை அருகில் இருந்த ஒரு தோட்டக் கிணற்றில் வீசிவிட்டு அனைவரும் தப்பியோடியுள்ளனர்.
இதற்கிடையே, கடந்த ஜூன் 13-ஆம் தேதி மேட்டுப்பாளையம் மணி நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் தோட்டக் கிணற்றில் இளைஞர் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் மிதப்பதாகப் போலீசாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. உடலை மீட்டுப் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், அது காணாமல் போன கண்ணன் என்பது உறுதி செய்யப்பட்டது. அவர் கடைசியாக வசந்தகுமார் மற்றும் மணிகண்டனுடன் சென்றதை ஆதாரமாகக் கொண்டு போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டனர். இந்தத் துயரச் சம்பவத்தில் தொடர்புடைய பாரதிராஜா, ருத்தீஷ், வசந்தகுமார் மற்றும் நசீர் உசேன் ஆகிய 4 பேரைக் காரமடை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக இருக்கும் முக்கிய குற்றவாளியான மணிகண்டனைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுத் தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
