LATEST NEWS
எக்ஸாம் எழுத தேவையில்லை…. மாதம் 1.5 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை… மிஸ் பண்ணாம உடனே அப்ளை பண்ணுங்க….!!
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தகுதியான இளம் பட்டதாரிகளுக்கு எவ்வித எழுத்துத் தேர்வும் இன்றி, நேர்காணல் மூலம் நேரடியாகப் பணி நியமனம் செய்வதற்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி செயற்கை நுண்ணறிவு (AI), குவாண்டம் தொழில்நுட்பம், இணையப் பாதுகாப்பு மற்றும் பருவநிலை மாற்ற இடர் ஆகிய 4 அதிநவீன தொழில்நுட்பத் துறைகளின் கீழ் மொத்தம் 12 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
முற்றிலும் முழுநேர ஒப்பந்த அடிப்படையிலான இந்த வேலைக்குத் தேர்வாகும் நபர்களுக்கு எவ்வித கூடுதல் படிகளும் இன்றி மாதம் ₹1,50,000 நிலையான ஊதியமாக வழங்கப்படும். ஆரம்பத்தில் 3 ஆண்டுகள் நிர்ணயிக்கப்படும் இந்த ஒப்பந்தக் காலம், தேவைக்கேற்ப அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை மட்டுமே நீட்டிக்கப்படும் என்றும், இது நிரந்தரமான அரசுப் பணியோ அல்லது ஓய்வூதிய பலன்கள் கொண்ட பதவியோ அல்ல என்றும் ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இந்தியக் குடிமகனாக இருப்பதோடு, வரும் ஜூலை 6, 2026 தேதியின்படி 21 வயது முதல் 30 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க ஜூலை 6 ஆம் தேதியே கடைசி நாளாகும். இதில் தேர்வாகும் வல்லுநர்கள் மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கியின் தலைமையகத்தில் 2026 ஆகஸ்ட் முதல் அக்டோபர் மாதத்திற்குள் பணியமர்த்தப்படுவார்கள்.
ஒப்பந்த விதிமுறைகளின்படி, பணியாளர்கள் வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களிலும் தேவைப்படின் பணியாற்ற வேண்டும். ஆண்டிற்கு 15 நாட்கள் மட்டுமே விடுப்பு அனுமதிக்கப்படும். மேலும், வங்கியின் கடுமையான நடத்தை விதிகளைப் பின்பற்றி முழுநேரமும் இதிலேயே கவனம் செலுத்த வேண்டும் என்பதால், முறையான அனுமதியின்றி வேறு எவ்வித பகுதிநேர வேலைகளிலோ அல்லது சொந்தத் தொழிலிலோ ஈடுபடக் கூடாது என்றும், தொடர்ந்து 8 நாட்கள் அனுமதியின்றிப் பணிக்கு வராமல் இருந்தால் ஒப்பந்தம் உடனடியாக ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
