LATEST NEWS
காங்கிரஸ் vs தவெக: காரைக்குடியில் மேயர் பதவியை தட்டித் தூக்கப்போவது யார்..? காய் நகர்த்தும் சிந்தாமணி & ஐயப்பன் … பெரும் பரபரப்பு…!!
தமிழகத்தில் காரைக்குடி மேயர் பதவியைக் கைப்பற்றுவதில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே தற்பொழுது கடும் போட்டி நிலவி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெக சார்பில் திருமயம் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த சிந்தாமணி என்பவர் தற்பொழுது இந்த மேயர் பதவியைக் குறிவைத்துத் தீவிரமாகக் காய் நகர்த்தி வருவதாகக் கூறப்படுகிறது. அதே வேளையில், காங்கிரஸ் தரப்பிலும் மேயர் வேட்பாளரைத் தேர்வு செய்வதற்கான ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளன.
சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு தவெக – காங்கிரஸ் இடையே கூட்டணி அமைந்துள்ள சூழ்நிலையில், சிவகங்கையில் காங்கிரஸ் மூத்த நிர்வாகியான சி.ஆர். சுந்தர் ராஜன் தனது ஆதரவாளர்கள் சுமார் 10 ஆயிரம் பேருடன் திடீரென தவெகவில் இணைந்தார். இந்த அதிரடித் தாவல் காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் அதிருப்தியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, தங்களின் பலத்தை நிரூபிக்கும் வகையில் காரைக்குடி மேயர் பதவியை எவ்வாறாவது கைப்பற்ற வேண்டும் என்பதில் காங்கிரஸ் தற்பொழுது தீவிர ஆர்வம் காட்டி வருகிறது.
மறுபுறம், தவெக தரப்பிலும் மேயர் பதவியைப் பிடிப்பதற்குப் பல்வேறு முக்கிய நிர்வாகிகள் தற்பொழுது போட்டி போட்டுக் கொண்டு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, அமைச்சர் பிரபுவின் தீவிர ஆதரவாளரான ஐயப்பனை மேயர் வேட்பாளராகக் களமிறக்குவதற்கான ரகசியப் பணிகளும் தற்பொழுது நடைபெற்று வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இரு தரப்பிலும் முக்கியப் புள்ளிகள் களம் காண்பதால் காரைக்குடி மேயர் நாற்காலியைக் கைப்பற்ற இரு கட்சிகளுக்கும் இடையிலான அரசியல் யுத்தம் மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
