LATEST NEWS
“மை ஸ்வீட் ப்ரோ விஜய்” இப்படி திருட்டு சக்தியா மாறிட்டிங்களே.. தவெகவை கிழித்து தொங்கவிட்ட கனிமொழி எம்பி..!!
திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்பியுமான கனிமொழி, மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் அரசியல் நிலைப்பாடுகளைக் கடுமையாக விமரிசித்துப் பேசினார். சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ‘மை டியர் ஸ்வீட் அங்கிள்’ என்று விஜய் அழைத்ததை மேடையில் சுட்டிக்காட்டிய கனிமொழி, அதற்குப் பதிலாக தான் விஜய்யை ‘ஸ்வீட் ப்ரோ’ என்று அழைப்பதாகக் கூறிப் பிரசாரத்தில் சுவாரசியத்தை ஏற்படுத்தினார்.
தொடர்ந்து தவெக-வின் கொள்கை மற்றும் செயல்பாடுகளை விமர்சித்த கனிமொழி, தங்களை ஒரு ‘தூய சக்தி’ என்று சொல்லிக்கொள்பவர்கள், இப்போது தாராபுரம் கூட்டத்தில் நாடகம் நடத்தியதன் மூலம் ‘திருட்டு சக்தி’யாக மாறிவிட்டனர் என்று சாடினார். மக்கள் மத்தியில் அனுதாபத்தை அள்ள மேடையில் அழுவது போன்ற நாடகங்களை அரங்கேற்றுபவர்களால் தூய்மையான அரசியலைத் தர முடியாது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
மேலும், தமிழ்நாட்டு அரசியலில் அதிமுக-வை ‘தீர்ந்து போன சக்தி’ என்று தவெக விமர்சிப்பதாகக் குறிப்பிட்ட கனிமொழி, அவ்வாறு விமர்சித்துவிட்டு தங்களின் கட்சித் வேட்பாளர்களாக அதே அதிமுக-விலிருந்து விலகி வருபவர்களைத் தான் அழைத்து வந்து தேர்தலில் போட்டியிட வைக்கிறார்கள் என்று சுட்டிக்காட்டினார். கொள்கையற்ற இத்தகைய அரசியல் செயல்பாடுகளை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் கனிமொழி தனது பரப்புரையில் பேசினார்.
