CRIME
வகுப்பறையில் ஆசிரியர் முன்பே பயங்கரம்… புத்தக சண்டையில் சக மாணவனை குத்திய 9-ம் வகுப்பு சிறுவன்.. அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி…!!
கொல்கத்தாவில் உள்ள பிரபல சவுத் பாயிண்ட் பள்ளியில் (South Point School) ஒன்பதாம் வகுப்பு பயிலும் 15 வயது மாணவர் ஒருவர், வகுப்பறைக்குள்ளேயே சக மாணவரால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்த கொடூரச் சம்பவம் புதன்கிழமை அரங்கேறியுள்ளது. இந்தத் தாக்குதல் வகுப்பறையில் ஆசிரியர் ஒருவர் முன்னிலையிலேயே, மதியம் 12:29 மணியளவில் நடந்துள்ளது. புத்தகங்கள் தொடர்பாக அவர்களுக்குள் ஏற்பட்ட சிறிய வாக்குவாதமே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என்று முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்த மாணவனுக்குப் பள்ளியில் முதலுதவி அளிக்கப்பட்டவுடன், அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டார். அவரது கழுத்து மற்றும் இடது கையின் விரல்களில் பலத்த வெட்டுக் காயங்கள் ஏற்பட்டதால், அவருக்கு அவசரப் பிரிவில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அந்த மாணவனின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இக்கட்டான இந்தச் சூழலில் மாணவனின் பெற்றோருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருவதாகப் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தாக்குதல் நடத்திய மாணவர் உடனடியாக வகுப்பறையிலிருந்து வெளியேற்றப்பட்டு, பள்ளியின் உளவியலாளர்கள் மூலம் அவருக்கு உரிய மனநல ஆலோசனை வழங்கப்பட்டது. பின்னர் அவரது தந்தை அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். இச்சம்பவம் குறித்து உள்ளூர் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளியின் புகார் குறித்துப் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எனினும், மாணவர்களின் வயது மற்றும் சட்ட நடைமுறைகள் காரணமாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
இக்கொடூரச் சம்பவம் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலை நேரில் பார்த்த சக மாணவர்களின் மனநலனை உறுதி செய்ய அவர்களுக்குத் தகுந்த ஆலோசனைகள் வழங்கப்படும் எனப் பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், எதிர்காலத்தில் மாணவர்களுக்கும் ஊழியர்களுக்கும் பாதுகாப்பான மற்றும் ஆதரவான சூழலை உறுதி செய்யத் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பள்ளி நிர்வாகம் உறுதியளித்துள்ளது.
