CRIME
சினிமா பாணி ஸ்கெட்ச்.. RTC பேருந்து ஜன்னல் வழியாக பறந்த 3 கோடி தங்கம்…. கீழே தயாராக நின்ற கூட்டாளிகள்.. சிசிடிவியில் சிக்கிய காட்சி..!!
ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் ராமச்சந்திரபுரம் பகுதியில், அரசுப் பேருந்தில் பயணம் செய்த ஒரு பயணியிடம் இருந்து சுமார் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள 2.5 கிலோ தங்கம் நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சோலாப்பூர் பகுதியைச் சேர்ந்த ஒரு கொள்ளைக் கும்பல், பேருந்தில் குறிப்பிட்ட அந்தப் பயணியைக் குறிவைத்துத் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளது. பேருந்தின் உள்ளே கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி, அந்தப் பயணியின் பையில் இருந்த தங்கக் கட்டிகளைக் திருடிய கொள்ளையர்கள், அதை உடனடியாக பேருந்தின் ஜன்னல் வழியாக வெளியே வீசி, கீழே தயாராக நின்ற தங்களது கூட்டாளிகளிடம் கொடுத்துப் பக்கா பிளான் போட்டுத் தப்பியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பயணி அளித்த புகாரின் பேரில் உடனடியாகக் களமிறங்கிய ராமச்சந்திரபுரம் போலீஸார், பேருந்து நிலையம் மற்றும் சாலையோரங்களில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததோடு, செல்போன் அழைப்பு விவரங்கள் போன்ற தொழில்நுட்ப ஆதாரங்களையும் கொண்டு தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தினர். இந்த அதிரடி நடவடிக்கையின் மூலம் கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்களைப் போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 2.5 கிலோ தங்கத்தையும் முழுமையாகப் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
