LATEST NEWS
கடைசி 15 நாட்கள் பிரசாரத்தில் நடந்தது என்ன…? தலைவர் விஜய் எல்லா இடங்களுக்கும் போகாததற்கு அந்த சதிதான் காரணம்…! மேடையில் வெடித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா..!!!
தமிழக வெற்றிக் கழகத்தில் மாற்றுக்கட்சியினர் இணையும் பிரம்மாண்ட விழா நடைபெற்றது. இதில் அதிமுகவிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் எம்எல்ஏ மரகதம் குமரவேல் உள்ளிட்டோர் தவெக-வில் இணைந்தனர். இந்த விழாவில் பேசிய தவெக-வின் முன்னணி தலைவரும் அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் மற்றும் விசுவாசிகளின் ஆதரவால்தான் தவெக மாபெரும் வெற்றி பெற்றது என்றும், தற்போது 60 சதவீத அதிமுக தவெக-வுடன் இணைந்துவிட்டது என்றும் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்
தேர்தல் பிரசாரத்தின் கடைசி 15 நாட்களில் தவெக தலைவர் விஜய் ஏன் எல்லா ஊர்களுக்கும் செல்லவில்லை என்பதற்கான அதிர்ச்சிகரமான காரணத்தை ஆதவ் அர்ஜுனா விளக்கினார். தேர்தல் சமயத்தில் முதலமைச்சர் விஜய்யை மக்கள் மத்தியில் பிரசாரம் செய்யவிடாமல் தடுக்கப் பல சதித்திட்டங்கள் தீட்டப்பட்டதாகவும், எங்குத் தவெக-வுக்குக் காவல் துறை பாதுகாப்பு இருந்ததோ, அங்கு மட்டும்தான் அவரால் செல்ல முடிந்தது என்றும் கூறினார். குறிப்பாக, திருப்பூரில் காவல் துறையினர் திட்டமிட்டே விலகிச் சென்று, மீண்டும் ஒரு பயங்கரமான செயற்கைக் கூட்ட நெரிசல் விபத்தை ஏற்படுத்தி சதி செய்ய திமுக முயற்சி செய்ததாக அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், அதிமுகவின் எடப்பாடி பழனிசாமியும் திரைமறைவில் ஒன்று சேரத் திட்டமிட்டுள்ளதாகவும், அதை முறியடிக்கவே தலைவர் விஜய் சரியான அரசியல் வியூகத்தை வகுத்து அதிமுக விசுவாசிகளைத் தவெக-வில் இணைத்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும், தவெக அரசைக் கவிழ்க்க திமுக தரப்பில் எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்க ரூ.50 கோடி வரை குதிரை பேரம் பேசப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், கரூரில் கடந்த காலங்களில் நடந்த தவறுகளுக்குச் சட்டம் தன் கடமையைச் செய்யும் என எச்சரித்தார். ஒருவேளை தமிழ்நாட்டில் மீண்டும் தேர்தல் வந்தாலும் 234 தொகுதிகளிலும் தவெக தனித்து நின்று அமோக வெற்றி பெறும் என்றும் அவர் உறுதியளித்தார்.
