LATEST NEWS
“ஆண்களின் சாதனையும் காலி!.. 2,400 மைல் தூரம்… 43 நாட்கள் தனிமை.. பசிபிக் கடலின் நடுவே நடந்த அந்த மிராக்கிள்.. கின்னஸ் சாதனைப் புத்தகத்தையே அதிர வைத்த அமெரிக்கப் பெண்”..!!
அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் இருந்து ஹவாய் தீவுகள் வரை பசிபிக் பெருங்கடலில் சுமார் 2,400 மைல் தூரத்தை, 43 நாட்களில் தனியாகச் சிறிய துடுப்புப் படகில் கடந்து 32 வயது சாகச வீராங்கனை கெல்சி ப்ஃபென்ட்லர் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். 2026 மே 21 அன்று கலிஃபோர்னியாவின் மாண்டெரே துறைமுகத்திலிருந்து “Lily” என்ற 21 அடி நீளப் படகில் தனது பயணத்தைத் தொடங்கிய அவர், எந்தவொரு இயந்திர அல்லது பாய்மர உதவியுமின்றி முற்றிலும் தனது உடல் மற்றும் மன வலிமையால் மட்டுமே இதைச் சாத்தியமாக்கியுள்ளார். இதன் மூலம் இந்த வழித்தடத்தில் தனியாகப் பயணித்துக் கடந்த முதல் அமெரிக்கப் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளதோடு, பெண்களுக்குரிய முந்தைய 86 நாட்கள் வேகச் சாதனையை மட்டுமின்றி, ஆண்களுக்குரிய 52 நாட்கள் சாதனையும் முறியடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
வெளியில் இருந்து பார்ப்பதற்குச் சாகசமாகத் தெரிந்தாலும், 43 நாட்கள் நீடித்த இந்தப் பயணத்தில் கெல்சி எண்ணற்ற சவால்களைச் சந்தித்துள்ளார். ஆழ்கடலின் பலத்த நீரோட்டங்கள் மற்றும் எதிர்க்காற்று காரணமாகத் தொடக்க வாரங்களில் சில நாட்களில் மொத்தம் ஏழு மணி நேரம் மட்டுமே தூங்கி, ஓய்வின்றித் துடுப்புப் போடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். கைகளில் ஏற்பட்ட கொப்பளங்கள், கடுமையான உடல் வலி, பசிபிக் பெருங்கடலின் நடுவே நிலவிய தீவிரத் தனிமை, காலநிலை மாற்றங்கள் போன்றவற்றைத் துணிச்சலுடன் எதிர்கொண்டார். 18 வயதிலிருந்தே கிராண்ட் கேன்யன் பகுதியில் நதி வழிகாட்டியாகப் பணியாற்றிய அனுபவமும், கடந்த 2024-ஆம் ஆண்டு நான்கு பெண்கள் கொண்ட குழுவுடன் இதே வழித்தடத்தில் பயணித்த கடல் அனுபவமுமே, இவரைத் தனியாக இந்த இமாலயச் சாதனையைச் செய்யத் தூண்டியுள்ளது.
தனது கடல் பயணத்தின் அன்றாட சுவாரசியமான அனுபவங்களையும், கடலில் குடிநீர் தயாரிப்பது போன்ற சவால்களையும் சமூக வலைத்தளங்களில் தினமும் வீடியோக்களாகப் பகிர்ந்து லட்சக்கணக்கான மக்களின் ஆதரவை கெல்சி பெற்றுள்ளார். பயணத்தை முடித்து ஹொனலுலுவின் அலா வாய் போட் ஹார்பர் துறைமுகத்தை அவர் அடைந்தபோது நூற்றுக்கணக்கான மக்கள் அவரை உற்சாகமாக வரவேற்றனர். தனது இந்த அரிய சாதனை குறித்துப் பேசிய கெல்சி, “ஒரு பெரிய சவாலைத் தொடங்கும் தைரியம் மட்டும் இருந்தால் போதும், அதற்கான மீதமுள்ள வலிமை பயணத்தின் போதே தானாக உருவாகும்” என்று உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். கடுமையான உழைப்பும் மன உறுதியும் இருந்தால் உலகின் எந்தவொரு மாபெரும் சவாலையும் வெல்ல முடியும் என்பதற்கு கெல்சியின் இந்தச் சாதனை ஒரு ஆகச்சிறந்த உத்வேகமாக மாறியுள்ளது.
