LATEST NEWS
கேக் வெட்டிய சில நிமிடங்களில் முடிந்த உயிர்..! நீச்சல் குளத்தில் சுருண்டு விழுந்த இளைஞர்.. மாரடைப்பா..? மர்மமா..?!
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவின் செக்டார் 135-ல் உள்ள நீச்சல் குளம் ஒன்றில் நடைபெற்ற நண்பரின் பிறந்தநாள் விழாவில், மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த லக்கி ஷம்பு டாமியா என்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். நொய்டாவில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த அவர், சனிக்கிழமை இரவு தனது நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்றுள்ளார். அங்கு கேக் வெட்டி, உணவு சாப்பிட்ட பிறகு நீச்சல் குளத்தில் குளிப்பதற்காக இறங்கியபோது, அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு தண்ணீருக்குள் மயங்கி விழுந்துள்ளார்.
இளைஞர் மயங்கி விழுந்ததைக் கண்ட அவரது நண்பர்கள், அவரை உடனடியாக தண்ணீரிலிருந்து மீட்டு அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த போலீஸார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் மரணத்திற்கான தெளிவான காரணம் தெரியவராததால், அவரது உடலுறுப்பு மாதிரிகள் அடுத்தகட்ட ஆய்விற்காகப் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.
முதற்கட்ட விசாரணையின்படி, அந்த இளைஞர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும், முழுமையான உண்மை விவரங்கள் ஆய்வக அறிக்கை வந்த பிறகே தெளிவாகத் தெரியும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். தற்சமயம் போலீஸார் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளைத் தீவிரமாக ஆய்வு செய்து, பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினரிடம் இருந்து இதுவரை எந்தப் புகாரும் வரவில்லை என்றும், இறுதி அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் போலீஸார் குறிப்பிட்டுள்ளனர்.
