LATEST NEWS
தெரிந்து செய்யல… என்னை மன்னிச்சிடுங்க..!” பிரதமர் மோடியை அவதூறாகப் பேசியதால் கைகூப்பி மன்னிப்பு கேட்ட ருசிகா சிங்..!!
டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின் போது, பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அவதூறான கருத்துகளைத் தெரிவித்த 15 வயது சிறுமியான ருசிகா சிங், கைகூப்பி மன்னிப்பு கேட்கும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. பிரதமருக்கு எதிராகத் தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்காக, ஒரு நாளுக்கு முன்பு நொய்டாவில் உள்ள எக்ஸ்பிரஸ்-வே காவல் நிலையத்தில் அவர் மீது ‘ஜீரோ எஃப்.ஐ.ஆர்’ பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், தான் செய்த தவறை ஒப்புக்கொண்டு அவர் பொதுமக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் வைரலாகும் அந்த வீடியோவில், ருசிகா சிங் தனது நண்பர்களுடன் கன்னாட் பிளேஸ் பகுதிக்குச் சென்றிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அங்கு குளிர்பானம் குடித்தபடி பல குழுக்களாகப் பேசிக்கொண்டிருந்த போது, ‘இன்ஃப்ளூயன்ஸர்’ ஒருவர் தன்னை ஏதாவது பேசுமாறு தூண்டியதாகவும், அதன்பிறகே தான் பிரதமருக்கு எதிராக அவ்வாறு பேசியதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். தான் வெறும் 15 வயது சிறுமி என்றும், தனது இந்தச் செயலுக்காக ஆழ்ந்த வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறிய அவர், நாட்டு மக்களிடம் கைகூப்பி மன்னிப்பு கேட்பதோடு இனிமேல் வாழ்வில் இதுபோன்று எந்தத் தவறும் செய்ய மாட்டேன் என்றும் உறுதியளித்துள்ளார்.
ஜூலை 23, 2026 அன்று நடைபெற்ற இந்தச் சம்பவத்தின் அடிப்படையில், அரசியலமைப்புப் பதவியின் மாண்பைக் குறைக்கும் வகையிலும், சமூகத்தில் பகைமையை உருவாக்கும் நோக்கிலும் செயல்பட்டதாக ருசிகா சிங் மீது BNS சட்டப்பிரிவுகள் 352, 353 மற்றும் 356 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஜந்தர் மந்தர் போராட்டத்தில் பங்கேற்ற சாமானிய மக்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும், அதேசமயம் கிரிமினல் குற்றச்சாட்டுகள் அல்லது பின்னணி கொண்டவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை தொடரும் என்றும் டெல்லி அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
