LATEST NEWS
“வயித்துப் பிழைப்புக்கு வந்த இடத்தில் கண்ணீர் தான் மிச்சம்…” ஹிந்தியே தெரியாது, 1 மாசத்துல மராத்தி எப்படி கத்துக்கிறது..? கதறி அழுத ஆட்டோ ஓட்டுநர்.. இணையத்தை உலுக்கும் வைரல் வீடியோ..!!
மகாராஷ்டிராவில் மராத்தி மொழி பேசத் தெரியாத ஆட்டோ ஓட்டுநர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்ற புதிய விதியின் அச்சத்தால், மும்பையில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் கண்ணீர் மல்கப் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற பிற மாநிலங்களில் இருந்து பிழைப்பு தேடி மும்பை வந்த தங்களைப் போன்ற ஏழைத் தொழிலாளர்களுக்கு இந்த உத்தரவு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்கள் அனைவரும் கண்டிப்பாக மராத்தி பேச வேண்டும் என்று மகாராஷ்டிர அரசு கொண்டு வந்துள்ள புதிய விதியின்படி, போக்குவரத்துத் துறை தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளது. மராத்தி மொழி பேசத் தவறினால் 3 மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படுவதோடு, 10,000 முதல் 15,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். அன்றாட வருமானத்தை நம்பி வாழும் தங்களால் இவ்வளவு பெரிய தொகையை அபராதமாகச் செலுத்த முடியாது என்றும், இந்த கெடுபிடியால் ஆட்டோ ஓட்டவே பயமாக இருக்கிறது என்றும் அந்த ஓட்டுநர் கண்ணீருடன் தனது நல்வாழ்வு குறித்த அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
https://www.instagram.com/reel/DcTsrwgMWhj/?utm_source=ig_web_button_share_sheet
ஹிந்தி மொழியைக் கூடச் சரியாகப் படிக்கத் தெரியாத தங்களால், ஒரே மாதத்திற்குள் எப்படிப் புதியதாக மராத்தி மொழியைக் கற்றுக்கொள்ள முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், மொழி கற்றுக்கொள்வதற்காவது அரசு தங்களுக்குக் கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து, இந்தியாவின் பிற மாநிலத் தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் பிராந்திய மொழி விதிகள் குறித்து நெட்டிசன்களிடையே காரசாரமான விவாதங்கள் எழுந்துள்ளன.
