LATEST NEWS
என்னப்பா சொல்றீங்க… மண்ணைத் தோண்டினா தங்கம் வருதா..? ஆட்டைத் தேடிப் போன இடத்தில் கிடைத்த அதிர்ஷ்டம்… ஒரே ஒரு தங்கத் துண்டால் தலைகீழாக மாறிய கென்யா கிராமத்தின் விசித்திரம்..!!
கென்யாவின் மேற்கு பகுதியில் உள்ள செபொரோர் என்ற அமைதியான கிராமம், எதிர்பாராத தங்க வேட்டையால் ஒரே இரவில் ஆயிரக்கணக்கான மக்கள் திரளும் மையமாக மாறியுள்ளது. ஆடு மேய்க்கும் மனாசே லோமச்சார் என்பவர் தனது ஆட்டைத் தேடிச் சென்றபோது, ஆற்றங்கரையில் சுமார் 3 கிராம் தங்கத் துண்டைக் கண்டெடுத்து, அதை 36,000 கென்ய ஷில்லிங்கிற்கு விற்றார். இந்தச் செய்தி காட்டுத்தீ போல பரவியதையடுத்து, கடந்த இரண்டு வாரங்களில் கென்யா மற்றும் அண்டை நாடான உகாண்டாவிலிருந்து ஒரே நாளில் 10,000 பேர் வரை அங்கு குவிந்துள்ளனர். இருப்பினும், அப்பகுதியில் உண்மையில் எவ்வளவு தங்கம் உள்ளது அல்லது கண்டுபிடிக்கப்பட்டவை அனைத்தும் உண்மையான தங்கம்தானா என்பது அதிகாரப்பூர்வமாக இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
இந்த தங்க வேட்டை மக்களின் பேராசையால் மட்டும் அல்லாமல், வறுமை மற்றும் அன்றாட வாழ்க்கைச் செலவுகளைச் சமாளிக்கும் தேவைகளாலேயே தூண்டப்பட்டுள்ளது. இங்கு வரும் மக்கள் ஆற்றங்கரை மணலைச் சலித்தும், கற்களை உடைத்தும் தங்கம் தேடி வருகின்றனர். ஒரு சிறிய தங்கத் துண்டு கிடைத்தால் கூட அது குழந்தைகளின் கல்விச் செலவு, உணவு மற்றும் வீட்டுத் தேவைகளுக்குப் பெரிதும் உதவும் என அவர்கள் நம்புகின்றனர். மக்களின் இந்த திடீர் வருகையால் அப்பகுதியில் உணவு, குடிநீர் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் 200-க்கும் மேற்பட்ட சிறிய கடைகள் உருவாகி, உள்ளூர் மக்களுக்குப் புதிய தற்காலிக வருமான வாய்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளன.
அதேவேளையில், இந்தத் திடீர் மக்கள் கூட்டம் கிராமத்தில் பல சிக்கல்களையும் உருவாக்கியுள்ளது. ஒரு சிறிய கிராமத்தின் நீர் வசதி, சுகாதாரம் மற்றும் அடிப்படை உள்கட்டமைப்பு ஆகியவை ஆயிரக்கணக்கான மக்களின் தேவையைச் சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றன. இதனால் உள்ளூர் நிர்வாகத்தின் கண்காணிப்பும் ஒழுங்குமுறையும் மிகவும் அவசியமாக மாறியுள்ளது. செபொரோர் கிராமத்தின் மண்ணுக்குள் மறைந்துள்ள தங்கம் மக்களின் வாழ்க்கையை உயர்த்தும் உண்மையான வளமாக மாறுமா அல்லது வெறும் தற்காலிகப் பரபரப்பாகவே முடியுமா என்பது இனி வரும் நாட்களில்தான் தெரியவரும்.
