LATEST NEWS
“கென்யாவை விட்டு வெளியேறுங்கள்” – டாடா நிறுவனத்திற்கு அதிபர் அதிரடி உத்தரவு: பின்னணியில் இருக்கும் பெரும் சர்ச்சை..!!
கென்யாவில் செயல்பட்டு வரும் இந்தியாவின் டாடா கெமிக்கல்ஸ் நிறுவனம், தனது செயல்பாடுகளை உடனடியாக நிறுத்திவிட்டு நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் வில்லியம் ரூட்டோ அதிரடி உத்தரவிட்டுள்ளார். தெற்கு கென்யாவின் மகோடி ஏரிப் பகுதியில் சோடா ஆஷ் தயாரிப்பில் ஈடுபடும் இந்த நிறுவனம், கடந்த 2005 முதல் இங்கு சுரங்கப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், கனிம வளங்களை உள்நாட்டிலேயே சுத்திகரிக்காதது, ராயல்டி நிலுவைத் தொகை, உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சி அளிக்கத் தவறியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் டாடா நிறுவனம் மீது சுமத்தப்பட்டுள்ளன.
அதிபர் வில்லியம் ரூட்டோ தனது சுற்றுப்பயணத்தின் போது, “டாடா நிறுவனம் 100 ஆண்டுகால ஒப்பந்தம் வைத்திருந்தாலும், காஜியாடோவில் ஒரு புதிய தொழிற்சாலையையோ அல்லது கண்ணாடி தயாரிப்பு ஆலையையோ அமைக்கவில்லை” என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். கென்ய அரசு வெறுமனே இயற்கை வளங்களை ஏற்றுமதி செய்வதை விரும்பவில்லை என்றும், மாறாக வளங்கள் கிடைக்கும் இடத்திலேயே தொழிற்சாலைகளை அமைத்து உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். டாடா நிறுவனத்திற்குப் பதிலாக புதிய இரண்டு நிறுவனங்களைக் கொண்டு வந்து இங்கு மிகப்பெரிய தொழிற்சாலைகள் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு விளக்கம் அளித்துள்ள டாடா நிறுவனம், கென்ய அரசின் அதிகாரத்தை மதிப்பதாகவும், சட்டப்பூர்வ மற்றும் அமைதியான முறையில் பேச்சுவார்த்தை மூலம் இதற்குத் தீர்வு காண விரும்புவதாகவும் கூறியுள்ளது. மகோடி பகுதியில் தங்களைச் சார்ந்து 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளதாகவும், நிறுவனத்தின் குடிநீர், சுகாதாரம் மற்றும் கல்விச் சேவைகளால் சுமார் 30,000 உள்ளூர் மக்கள் நேரடியாகப் பயனடைந்து வருவதாகவும் டாடா நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், அதிபரின் இந்த உத்தரவை இறுதி முடிவாகக் கருதவில்லை என்றும் பேச்சுவார்த்தை தொடரும் என்றும் நிறுவனம் நம்புகிறது.
