LATEST NEWS
பெற்றோர்களே எச்சரிக்கை..! இணைய வழியில் ஆண்டுக்கு 2 கோடி குழந்தைகள் பாலியல் கொடுமைக்கு ஆளாகும் அவலம்.. அதிரவைக்கும் புள்ளிவிவரம்..!!
இணைய வழியில் ஆண்டுதோறும் சுமார் 2 கோடி குழந்தைகள் பாலியல் அச்சுறுத்தல்களுக்கும் கொடுமைகளுக்கும் ஆளாகிறார்கள் என்று 21 நாடுகளில் நடத்தப்பட்ட புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சமூக ஊடகங்கள் மற்றும் ஆன்லைன் கேமிங் தளங்கள் மூலமாக இணைய குற்றவாளிகள் குழந்தைகளைக் குறிவைத்து இந்த பாலியல் சுரண்டலில் ஈடுபடுவது பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. உலகளவில் 12 முதல் 17 வயதுடைய சிறுவர்களில் ஐந்தில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் ஆண்டுக்கு பலமுறை இத்தகைய பாதிப்புகளைச் சந்திக்கின்றனர்.
இந்த ஆய்வின் புள்ளிவிவரங்களின்படி, சுமார் 1.5 கோடி குழந்தைகள் தங்களின் விருப்பமில்லாமல் ஆன்லைனில் ஆபாச உள்ளடக்கங்களைப் பார்க்க நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். மேலும், 90 லட்சம் குழந்தைகள் பாலியல் உரையாடல்களில் ஈடுபடவும், தங்களது ஆபாசப் படங்களைப் பகிரவும் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இதுதவிர, 40 லட்சம் குழந்தைகளின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் அவர்களின் சம்மதமே இல்லாமல் இணையத்தில் பிறரால் பகிரப்பட்டுப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.
உலகளவில் ஒப்பிடும்போது பாதிக்கப்பட்ட குழந்தைகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கை இன்னும் பல கோடிகளைத் தாண்டும் என்று இந்த ஆய்வு எச்சரிக்கிறது. எனவே, குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், இணையவழிப் பாலியல் குற்றங்களைத் தடுக்கவும் டிஜிட்டல் தளங்கள் உடனடியாகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
