LATEST NEWS
“5 அடி பள்ளத்தில் பாய்ந்த பள்ளி வேன்!” தேவதூதனாய் வந்த பாதசாரி… மரத்தை உடைத்துக் கொண்டு விழுந்த கொடூர விபத்தின் நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தின் விஜய் நகர் பகுதியில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து மரத்தை உடைத்துக் கொண்டு சுமார் 5 அடி ஆழமுள்ள சர்வீஸ் சாலையில் விழுந்து விபத்துக்குள்ளான கோரமான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வியாழக்கிழமை காலை 7:30 மணியளவில் விஜய் நகரிலுள்ள டிஏவி பள்ளி அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அத்தனை உயரத்திலிருந்து வேன் கீழே விழுந்த போதிலும், அது தலைகீழாகக் கவிழாததால் ஒரு மாபெரும் உயிர்ச் சேதம் அதிர்ஷ்டவசமாகத் தவிர்க்கப்பட்டுள்ளது.
வேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்து கீழே பாய்ந்ததும், அதற்குள் இருந்த பள்ளிச் சிறுவர்கள் பயத்தில் அலறித் துடித்துள்ளனர். விபத்து நடந்த அதே நொடியில் அந்தச் சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்த ஒரு நபர், வேன் தன் மீது விழாமல் இருக்க முதலில் சில அடிகள் பின்வாங்கி ஓடியுள்ளார். பின்னர் சுதாரித்துக் கொண்ட அவர், உடனடியாக ஓடிச் சென்று வேனின் ஜன்னல் கதவைத் திறந்து, அதற்குள் சிக்கியிருந்த குழந்தைகளை மீட்டகத் தொடங்கினார்.
சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதி பொதுமக்களும் அந்த நபருடன் இணைந்து மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த விபத்தில் வேனில் இருந்த பள்ளி மாணவர்கள், ஓட்டுநர் உட்பட யாருக்கும் எந்தவிதமான காயங்களும் ஏற்படவில்லை என்றும், அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர் என்றும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். மரம் முறிந்து வேனின் வேகத்தைக் குறைத்ததே குழந்தைகள் காயமின்றி தப்பியதற்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.
விஜய் நகர் காவல் நிலைய அதிகாரி தர்மபால் சிங் இதுகுறித்துப் பேசுகையில், பள்ளி வேன் எவ்வாறு கட்டுப்பாட்டை இழந்தது என்பது குறித்துப் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்தார். விபத்திற்கான துல்லியமான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இதற்கிடையில், இந்த விபத்தின் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வேகமாகப் பரவி வரும் வேளையில், குழந்தைகள் அனைவரும் எவ்வித காயமுமின்றி தப்பியதை அறிந்து நெட்டிசன்கள் பலரும் நிம்மதி பெருமூச்சு விட்டு வருகின்றனர்.
