LATEST NEWS
பெரும் சோகம்..! முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்.. அரசியல் தலைவர்கள் இரங்கல்..!!
முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான இ.எம். சுதர்சன நாச்சியப்பன் (79), சிவகங்கையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாகக் காலமானார். சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியின் முன்னாள் எம்பியான அவர், கடந்த சில நாட்களாக வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வந்த நிலையில், இன்று அவரது உயிர் பிரிந்தது. சட்டப் படிப்பை முடித்து உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராகத் திகழ்ந்த இவர், மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) மத்திய அரசில் வணிகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சராகப் பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியல் மற்றும் சட்டத்துறையில் தடம் பதித்த சுதர்சன நாச்சியப்பனின் மறைவுச் செய்தி தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்குக் காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவர்கள், தமிழக முதலமைச்சர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். அன்னாரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சிவகங்கையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன், இறுதிச் சடங்குகள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
