CRIME
“3 லட்சம் தர்றேன் அவளை முடிச்சுடு.. பணிப்பெண் குடும்பத்தையே கூலிப்படையா மாற்றி… மருமகளைப் போட்டுக் தள்ளிய கொடூர மாமியார்..!” நெஞ்சை நடுங்க வைக்கும் மும்பை சம்பவம்..!!
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் காட்கோபர் பகுதியில், 35 வயதான சப்னா காஞ்சி என்ற பெண் குளியலறையில் வழுக்கி விழுந்து உயிரிழந்துவிட்டதாகக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவரது உடலை பரிசோதித்த பந்த் நகர் பொலிஸார், சப்னாவின் கழுத்தில் நீல நிறக் காயங்களும் தலையின் இடது பக்கத்தில் ரத்தக் காயங்களும் இருப்பதைக் கண்டறிந்தனர். இதன் பின்னணியில் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், அது விபத்து அல்ல; சப்னாவின் 65 வயது மாமியார் தனலட்சுமி காஞ்சி திட்டமிட்டு நடத்திய படுகொலை என்பது வெளிச்சத்திற்கு வந்தது. இந்த வழக்கில் மாமியார் தனலட்சுமி, அவரது வீட்டுப் பணிப்பெண் மங்களா ஜாதவ், மங்களாவின் கணவர் சுரேஷ், மகள் சிவானி மற்றும் மகன் சாஜன் ஆகிய 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சப்னாவுக்கு மதுப்பழக்கம் இருப்பதாகவும், தவறான தொடர்பு இருப்பதாகவும் மாமியார் தனலட்சுமி சந்தேகப்பட்டுள்ளார். மேலும், சப்னா ஏற்கனவே 2024-இல் கணவர் வீட்டார் மீது குடும்ப வன்முறை வழக்கும் பதிவு செய்திருந்தார். துபாயில் பணிபுரியும் கணவரிடமிருந்து விடுமுறைக்காக ஜூன் மாதம் ஊருக்குத் திரும்பிய சப்னாவுக்கும் மாமியாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் சப்னாவை ஆளை வைத்து முடிக்கத் திட்டமிட்ட தனலட்சுமி, தனது வீட்டுப் பணிப்பெண் மங்களாவிடம் ரூ.3 லட்சம் கூலி தருவதாகக் கூறி கொலை செய்ய ஒப்பந்தம் பேசினார். இந்த சதியில் பணிப்பெண் மங்களாவின் கணவர், மகன் மற்றும் மகளும் இணைந்துகொண்டனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம், பிரச்சனையை பேசித் தீர்ப்பதாகக் கூறி தனலட்சுமி சப்னாவின் வீட்டிற்குச் சென்று, பணிப்பெண் மங்களா மற்றும் அவரது குடும்பத்தினரை ரகசியமாக வீட்டிற்குள் வரவழைத்தார். சப்னாவின் கண்ணில் காரப் பொடியைத் தூவி, கண்ணாடியால் தலையில் பலமாகத் தாக்கியுள்ளனர். பின்னர் துப்பட்டாவால் கழுத்தை நெரித்ததுடன், அவர் மூச்சு நிற்குமாறு கழுத்தின் மீது ஏறி நின்று கொடூரமாகக் கொன்றுள்ளனர். கொலைக்குச் சான்றுகளை அழிப்பதற்காக உடலைக் குளியலறையில் போட்டு, விபத்து போல நாடகமாட முயற்சித்தது பொலிஸாரின் விசாரணையில் அம்பலமானது.
