CRIME
என்னப்பா இது அநியாயம்..? சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றச் சென்ற போலீஸ்… எஸ்.ஐ. கழுத்தை நெரித்து இரும்புச் சங்கிலியால் தாக்கிய பொதுமக்கள்… லக்னோவில் அரங்கேறிய அதிர்ச்சிச் சம்பவம்..!!
லக்னோ மாநகராட்சி மற்றும் காவல்துறையினர் இணைந்து பாரா காவல் எல்லைக்கு உட்பட்ட காரியானா-பாதல்கேடா பகுதியில் மாலை 5:10 மணியளவில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் மற்றும் மாட்டுப் பண்ணைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் சிலர் திரண்டு வந்து காவல் துறையினர் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் மீது கற்களை வீசியும், தடிகள் மற்றும் இரும்புக் கம்பிகளால் தாக்கியும் வன்முறையில் ஈடுபட்டனர். இந்த மோதலின் போது அரசு வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டன.
இந்தச் சம்பவம் குறித்து முதன்மைத் தகவல் அறிக்கை பதிவு செய்த சப்-இன்ஸ்பெக்டர் வினய் படேல் கூறுகையில், சூழ்நிலையைக் கட்டுப்படுத்த முயன்றபோது அவர் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். ஒரு வாலிபர் அவரைப் பின்னால் இருந்து பிடித்துக் கீழே தள்ளி, கழுத்தை நெரித்துக் கொல்ல முயன்றதாகவும், அதே நேரத்தில் ஒரு பெண் அவரது தலையில் கனமான இரும்புச் சங்கிலியால் தாக்கியதாகவும் புகார் அளித்துள்ளார். இதனைக் கண்ட சக காவல்துறையினர் உடனடியாகத் தலையிட்டு அவரைக் காப்பாற்றினர்.
இச்சம்பவம் முழுவதும் அங்கிருந்த காவல்துறையினரால் வீடியோ பதிவு செய்யப்பட்டது. இருப்பினும், சம்பவ இடத்தில் இருந்த பெண்கள் பின்னர் காவல்துறையினர் மீது தவறான குற்றச்சாட்டுகளைச் சுமத்தினர், இதனால் அங்குப் பதற்றமான சூழல் நிலவியது. காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியது மற்றும் அரசுச் சொத்துக்களைச் சேதப்படுத்தியது தொடர்பாகப் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், காவல்துறையினர் இது குறித்துத் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
