LATEST NEWS
டெலிவரி முடிந்து வீட்டுக்கு வந்த பெண்ணுக்குக் கடுமையான வயிற்று வலி… மீண்டும் ஆபரேஷன் செய்தபோது வயிற்றில் காத்திருந்த அதிர்ச்சி.. மருத்துவர்கள் இப்படி செய்யலாமா..? கொதிக்கும் உறவினர்கள்..!!
மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தியா சூராஜ் கெய்க்வாட் என்ற பெண்மணிக்கு, கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி பீட் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு நான்கு நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த அவர், பின்னர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் வீட்டிற்குச் சென்றதிலிருந்து அவருக்குக் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதோடு, உடல்நிலையும் தொடர்ந்து மோசமடையத் தொடங்கியது.
வயிற்று வலி குறையாததால், குடும்பத்தினர் அவரை ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவரது வயிற்றிற்குள் ஏதோ அந்நியப் பொருள் இருப்பதாகச் சந்தேகித்தனர். இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக அவர் புனேவில் உள்ள சசூன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டபோது, முந்தைய சிசேரியன் அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்கள் தவறுதலாக விட்டுச்சென்ற கையுறைகள் மற்றும் காகித கைக்குட்டை அவரது வயிற்றிலிருந்து அகற்றப்பட்டன.
இந்தச் சம்பவத்திற்கு அரசு மருத்துவமனையின் அலட்சியமே காரணம் எனச் சாடியுள்ள பெண்ணின் கணவர் சூராஜ் கெய்க்வாட், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளார். மேலும், பெற்ற குழந்தையைக் கையில் தூக்கிக்கொள்ளக் கூடத் தெம்பில்லாமல் உயிருக்குப் போராடி வரும் மகளின் நிலையைக் கண்டு அவரது தாயாரும் வேதனை தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்துப் பேசிய பீட் மாவட்ட தலைமைச் சர்ஜன் சதீஷ்குமார் சோலங்கே, தொடர்புடைய பெண் மருத்துவர் மற்றும் ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், விசாரணைக்குப் பின் தவறிழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.
