CRIME
“என் புருஷன கொன்னுட்டு… வீட்டிலிருந்த நகை-பணத்தையும் தூக்கிட்டு போயிட்டாங்க..!” ஷாஜகான்பூரில் சோதனைக்கு வந்த போலிஸ் மீது மனைவி பகீர் குற்றச்சாட்டு..!!
உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில் உள்ளூர் காவல்துறையின் நடவடிக்கை குறித்து கடும் சர்ச்சையும் கேள்விகளும் எழுந்துள்ளன. அங்குள்ள நிகோஹி காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட நகரில் வசித்து வந்த உமேஷ் குப்தா என்பவரின் வீட்டின் மீது நள்ளிரவில் காவல்துறை சோதனையிட்டதைத் தொடர்ந்து, அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உமேஷ் குப்தாவின் மனைவி காவல் துறை அதிகாரிகளிடம் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது; ஆகஸ்ட் 19, 2026 அன்று நள்ளிரவு சுமார் 2:30 மணியளவில் காக்கி சீருடை அணிந்த காவல்துறையினர் சிலர் தங்கள் வீட்டிற்கு வந்து கதவைத் தட்டினர். அவர்கள் தங்களை காவலர்கள் என்று அடையாளப்படுத்தியதால், அதை நம்பி குடும்பத்தினர் கதவைத் திறந்தனர். வீட்டிற்குள் நுழைந்த காவல்துறையினர் உமேஷ் குப்தாவைப் பிடித்து மாடிக்குக் கொண்டு சென்று அங்கிருந்து கீழே வீசியதாகவும், இதில் அவர் உயிரிழந்ததாகவும் அவரது மனைவி குற்றம் சாட்டியுள்ளார். மேலும், சோதனையின் போது காவல்துறையினர் வீட்டிலிருந்த பொருட்கள் மற்றும் நகைகளையும் எடுத்துச் சென்றுவிட்டதாக அவர் புகார் அளித்துள்ளார்.
மறுபுறம் காவல்துறை தரப்பில் கூறுகையில்; லக்னோவில் 2025 ஆம் ஆண்டு நகைக்கடை ஒன்றில் நடந்த திருட்டு சம்பவத்தில் திருட்டுப் பொருட்களை வாங்கியதாக உமேஷ் குப்தா மீது குற்றச்சாட்டு இருந்தது. இது தொடர்பாக மாலிஹாபாத் காவல்துறையினர் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையுடன் நிகோஹி பகுதியில் உள்ள அவரது வீட்டிற்குச் சோதனை நடத்தச் சென்றனர். அப்போது காவல்துறையைக் கண்டு பயந்து ஓட முயன்ற உமேஷ் குப்தா, மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து உயிரிழந்ததாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து உறவினர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், உயிரிழந்தவரின் மனைவியின் புகாரின் பேரில் நிகோஹி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
