CRIME
“நீ என்ன பெரிய அப்பாடக்கர் டாக்டரா..?” மரியாதையாக பேசச் சொன்னதற்கு மருத்துவருக்கு தர்மஅடி… நோயாளியின் மகன் பகீர் துணிகரம்..!!
மகாராஷ்டிராவில் சிவசேனா கவுன்சிலர் ஒருவரால் மருத்துவர் தாக்கப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு, கல்யாணில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இரண்டாவது தாக்குதல் சம்பவம் பதிவாகியுள்ளது. சனிக்கிழமை இரவு சுமார் 11 மணியளவில், எலும்பு மருத்துவரான டாக்டர் யோகேந்திர ஜெயஸ்வால் நோயாளியைப் பரிசோதித்துக் கொண்டிருந்தபோது இச்சம்பவம் நடந்துள்ளது. விலா எலும்பு முறிவு ஏற்பட்டிருந்த ஜெயவந்த் தேஷ்முக் என்ற நோயாளிக்கு மருத்துவச் சிகிச்சை முறைகளை விளக்கியபோது, அவரது மகன் அதே கேள்விகளை மீண்டும் மீண்டும் கேட்டு, மரியாதையற்ற முறையில் பேசியுள்ளார்.
என்னிடம் ஏன் மரியாதையின்றிப் பேசுகிறீர்கள் என்று கேட்ட மருத்துவரிடம், “நீ யார் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாய் – ஏதோ பெரிய மருத்துவர் என்று?” எனக் கூறிவிட்டு வெளியே சென்று திட்டத் தொடங்கியுள்ளார். மருத்துவர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், அவர் உள்ளே திரும்பி வந்து மருத்துவரைத் தாக்கியுள்ளார். இது தொடர்பாகக் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
டோம்பிவிலியில் நடைபெற்ற முந்தைய தாக்குதலைத் தொடர்ந்து நிகழ்ந்த இச்சம்பவம், கூடுதல் பாதுகாப்பைக் கோரும் மருத்துவர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜூலை தொடக்கத்தில் கல்யாண்-டோம்பிவ்லி சிவசேனா கவுன்சிலர் ரமேஷ் மத்ரே, பெண் மருத்துவர் மற்றும் செவிலியர்களைத் தாக்கிய காட்சி கேமராவில் பதிவாகியும் அவர் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். “நாங்கள் நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றப் படித்து உழைக்கிறோம், ஆனால் பாராட்டுக்குப் பதிலாக அடி வாங்குகிறோம்” எனப் பாதிக்கப்பட்ட மருத்துவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
