“கொலை பண்ணிட்டு குளிச்சிட்டு பேரீச்சம்பழம் சாப்பிட்டாங்க” கொள்ளை நாடகமாடிய கொலையாளிகள்.. 12 வயது சிறுவன் உள்பட ஒரே குடும்பத்தை கூண்டோடு முடித்த கொடூரர்களின் திடுக்கிடும் வாக்குமூலம்…!! – cinefeeds
Connect with us

CRIME

“கொலை பண்ணிட்டு குளிச்சிட்டு பேரீச்சம்பழம் சாப்பிட்டாங்க” கொள்ளை நாடகமாடிய கொலையாளிகள்.. 12 வயது சிறுவன் உள்பட ஒரே குடும்பத்தை கூண்டோடு முடித்த கொடூரர்களின் திடுக்கிடும் வாக்குமூலம்…!!

Published

on

வங்கதேசத்தின் ரங்பூர் நகரில் உள்ள தாஸ்பாறா பகுதியில் வசித்து வந்த ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர் கணபதி சக்ரவர்த்தி (65), அவரின் மனைவி பிரிதிலதா (50), மகள் அகாமி (23) மற்றும் 12 வயது மகன் பிரியம் ஆகிய 4 பேர் கடந்த வாரம் தங்களது பூட்டிய வீட்டிற்குள் கொடூரமான முறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர். கடந்த வியாழக்கிழமை முதல் இவர்களது கைபேசிகள் அனைத்தும் அணைத்து வைக்கப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்த உறவினர்கள் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். சனிக்கிழமை இரவு அங்கு வந்த போலீசார் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, குடும்பத்தினர் அனைவரும் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இந்த கொடூரக் கொலைச் சம்பவம் குறித்து வங்கதேச போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், முக்தா தாஸ் மற்றும் சித்தார்த்தா தாஸ் ஆகிய இருவர் தான் இந்த படுகொலையைச் செய்துள்ளனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவத்தன்று நள்ளிரவு குற்றவாளிகள் இருவரும் கணபதி சக்ரவர்த்தியின் வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்து ‘யாபா’ என்ற போதைப்பொருளை உட்கொண்டிருந்தனர். இதனை கவனித்த கணபதி சக்ரவர்த்தி மொட்டை மாடிக்குச் சென்று, தனது வீட்டின் மேல் போதைப்பொருள் பயன்படுத்துவதைக் கடுமையாகக் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இருவரும் முதலில் துண்டால் கணபதியின் கழுத்தை இறுக்கிக் கொலை செய்தனர்.

Advertisement

அதன் தொடர்ச்சியாக, கணபதியின் முனகல் சத்தம் கேட்டு படிக்கட்டு வழியே மேலே வந்த அவரது மனைவி பிரிதிலதாவையும், தாயின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த மகள் அகாமியையும் குற்றவாளிகள் அடுத்தடுத்து படிக்கட்டுகளிலேயே கழுத்தை நெரித்துக் கொன்றனர். இறுதியில், தங்களது இந்த கொடூரக் குற்றம் எங்கே வெளியே தெரிந்துவிடுமோ என்ற பயத்தில், கட்டிலில் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்த 12 வயது சிறுவன் பிரியத்தையும் அவர்கள் விடாமல் கழுத்தை நெரித்துப் படுகொலை செய்தனர்.

இந்த 4 கொலைகளையும் அரங்கேற்றிய பிறகு குற்றவாளிகள் இருவரும் சிறிதும் பயமின்றி அந்த வீட்டிலேயே குளித்துவிட்டு, அங்கிருந்த பிரிட்ஜைத் திறந்து அதில் வைத்திருந்த பேரீச்சம்பழம் மற்றும் வெள்ளரிக்காய்களை எடுத்துச் சாப்பிட்டுள்ளனர். பின்னர், இந்த ஒட்டுமொத்த சம்பவத்தையும் திசைதிருப்பி ஒரு கொள்ளை நாடகமாகக் காட்டுவதற்காக, வீட்டிலிருந்த அலமாரிகளைத் திறந்து உடைகளை நாலாபுறமும் கலைத்துப் போட்டுவிட்டு, அங்கிருந்த தங்க நகைகளைத் திருடிக்கொண்டு வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகை நேரத்தில் வீதிகள் காலியாக இருந்தபோது தப்பியோடியுள்ளனர். தற்போது கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள் இருவரும் தங்களது கொடூரக் குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in