LATEST NEWS
“அடி, உதை.. கொடுமை தாங்க முடியல” விவாகரத்து கேட்டு ஆளுநரிடம் தஞ்சம் புகுந்த 18 வயது பெண்… பெண்களுக்கு சிந்திக்கும் திறனே கிடையாது என அவமதித்து, வாய்விட்டு சிரித்த தலிபான்கள்..!!
வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் ஆளுநர் அப்துல்லா சர்ஹாதி அலுவலகத்தில் சிறுவன் ஒருவனின் உடைந்த கைக்கு சிகிச்சை அளிப்பதற்காக பணம் வழங்கியவுடன், உள்ளூர் மசூதியை மேம்படுத்துவதற்காகவும் நிதி வழங்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து நடந்த மற்றொரு சம்பவம் தலிபான்களின் மற்றொரு முகத்தை காட்டியுள்ளது. 18 வயதுடைய பெண் ஒருவர் முகத்தை முழுவதுமாக மூடிக்கொண்டும் கண்ணாடி அணிந்தும், தலிபான் அலுவலகத்திற்கு வந்து, அந்தப் பெண்ணின் கணவர் பல மாதங்களாக அடித்தும், உதைத்தும், பணம் கேட்டும் கொடுமை செய்வதாக குற்றம் சாட்டினார். இதனால் கணவரிடம் இருந்து உடனடியாக விவாகரத்து பெற்றுத் தருமாறு ஆளுநரிடம் முறையிட்டார். ஆனால், ஆளுநர் விவாகரத்தை தவிர்த்து கணவருடன் சேர்ந்து வாழும்படி அந்த பெண்ணிடம் அறிவுறுத்தினார். தொடர்ந்து அந்த பெண்ணின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டார். மேலும், கணவருடன் தொடர்ந்து வாழ முடியாது என்றும், தனது மரியாதையை ஏற்கனவே இழந்துவிட்டதாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.
விவாகரத்தை கைவிடுமாறு ஆளுநர் கூறினார், ஆனால் அந்த பெண் தனது முடிவில் உறுதியாக இருந்தார். இஸ்லாமிய சட்டத்தின்படி, திருமணத்திற்கு கணவன் வழங்கிய பணத்தை, விவாகரத்தில் மனைவி திருப்பி கொடுக்க வேண்டும். திருமணத்திற்கு வழங்கிய தொகையை விட நான்கு மடங்கு பணம் வேண்டும் என அந்த பெண்ணின் கணவர் கேட்டதாக கூறப்படுகிறது. அந்தத் தொகையை வழங்குவதற்கு பெண்ணின் குடும்பத்தினர் மறுத்துள்ளனர். இதனை ஆளுநரிடம் கூறியபோது அந்தப் பெண்ணுக்கு தனி அறை வழங்க வேண்டும் என்றும், அடிக்கவோ துன்புறுத்தவோ கூடாது என்றும் ஆளுநர் கணவரிடம் கூறினார். மீறினால் கைது செய்யப்படுவீர்கள் என்று எச்சரித்துள்ளார். ஆனால் அந்த பெண் விவாகரத்து பெறும் நோக்கில் உறுதியாக இருந்தார். விவாகரத்து கோரிக்கையை பெற மறுத்த ஆளுநர் பெண்ணை இழிவுபடுத்தும் நோக்கில் பெண்கள் “சிந்திக்கும் திறன் இல்லாதவர்கள்” என்று கூறினார். அப்போது அவரை சுற்றியிருந்த அதிகாரிகள் மற்றும் கட்சி தலைவர்கள் வாய்விட்டு சிரித்ததாகவும் கூறப்படுகிறது.
2021-ம் ஆண்டு அமெரிக்க ஆதரவு பெற்ற ஆப்கானிஸ்தான் அரசை அகற்றி தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றினர். அதன் பின்னர் பெண்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொது வாழ்க்கை தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பெண்கள் மேல்நிலை கல்வி மற்றும் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்பிக்கக்கூடாது என்றும், பெரும்பாலான பணியிடங்களில் இருந்தும் பெண்கள் விலக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம், தலிபான்கள் ஆட்சியில் பெண்களின் உரிமைகள் மற்றும் குடும்ப வாழ்க்கைத் தரத்தில் பெண்களின் அவல நிலையை வெளிப்படுத்துகிறது.
