LATEST NEWS
“கன்னிப்பேச்சு வார்த்தையை மாத்துங்க…” அதுக்கு பதிலா இப்படி சொல்லலாம்… சௌமியா அன்புமணி கோரிக்கைக்கு அமைச்சர் ராஜ்மோகன் பச்சைக்கொடி..!!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 6வது நாளாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றபோது, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிக்கால் துறைக்கான மானியக் கோரிக்கை விவாதத்தில் உசிலம்பட்டி தவெக சட்டமன்ற உறுப்பினர் ம. விஜய் அத்தொகுதியில் உள்ள தண்ணீர் பிரச்சினை குறித்து பேசி திமுகவை சாடினார். அவரின் பேச்சுக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. இருத்தரப்பினரையும் அமைதிப்படுத்தி உறுப்பினர் விஜய் தொடர்ந்து பேச சபாநாயகர் அனுமதி அளித்த நிலையில், குறுக்கிட்டுப் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், “சட்டமன்ற உறுப்பினர் தனது கன்னிப்பேச்சை பேசுகிறார். குரலற்றவர்களின் குரலாக இருக்கும் உறுப்பினர் ம. விஜய்யின் முதல் பேச்சை அவர் உரையை முடிக்கும் வரை அனுமதிக்க வேண்டும்” என்றார்.
இந்த விவாதத்திற்குப் பிறகு பேசிய பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி, சட்டப்பேரவையில் ‘கன்னிப்பேச்சு’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக ‘அறிமுக உரை’ அல்லது ‘முதல் உரை’ என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதனைத் தொடர்ந்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் லதா, சட்டப்பேரவையில் ‘கன்னிப்பேச்சு’ எனக் கூறுவது ஆணாதிக்க சிந்தனையை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது என்றும், அதனை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், ஏற்கனவே சட்டமன்றத்தில் முன்னாள் உறுப்பினர் வானதி சீனிவாசனும் இதே கோரிக்கையை வைத்ததைச் சுட்டிக்காட்டினார். மேலும், ‘கன்னிப்பேச்சு’ என்ற வார்த்தை வழக்கமான மரபாக இருந்து வந்தாலும், பெண்ணிய சுதந்திரத்திற்கு குரல் கொடுக்கும் இந்த ஆட்சியில் அதனைப் பரிசீலனை செய்து ‘அறிமுக உரை’ என மாற்றுவதற்கு ஏற்பாடுகள் செய்ய வழிமொழிவதாகத் தெரிவித்தார்.
