LATEST NEWS
விஜய்யின் தந்திரம்… மரகதம் குமரவேலுக்கு சீட் கொடுத்ததன் உள்நோக்கம் என்ன..? பின்னணியை அம்பலப்படுத்திய துக்ளக் ரமேஷ்..!!
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளில் வரும் அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இதில் நிலவும் பலமுனை போட்டி மற்றும் அரசியல் நிலவரங்கள் குறித்து மூத்த பத்திரிகையாளர் துக்ளக் ரமேஷ் பிரத்யேக நேர்காணல் ஒன்றில் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். இந்தத் தேர்தலில் நிலவும் பலமுனை போட்டியானது ஆளும் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கு சாதகமாக அமையும் என்று அவர் கணித்துள்ளார். மேலும், எதிர்க்கட்சிகளான திமுக அல்லது அதிமுக தங்களுக்குள் நிலவும் வாக்கு பிரிப்பைத் தவிர்க்க, தேர்தலைப் புறக்கணித்துவிட்டு ஒரு பொது வேட்பாளரை நிறுத்தியிருக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தவெக சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா ஆகிய இருவரைப் பற்றிய கேள்விக்கு, அவர்கள் இருவரும் அரசியல் மற்றும் தனிப்பட்ட ஆதாயத்திற்காகக் கூச்சமே இல்லாமல் கட்சி தாவியவர்கள் என்று துக்ளக் ரமேஷ் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். பொதுத்தேர்தல் முடிந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், எந்தவொரு நியாயமான காரணமும் இன்றி வெறும் பேரங்களின் அடிப்படையிலேயே இவர்கள் கட்சி மாறியுள்ளதால், தொகுதி மக்கள் இவர்களைத் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்றும் அவர் மக்கள் முன் கோரிக்கை வைத்துள்ளார்.
அதிமுகவிலிருந்து அதிருப்தியில் வந்த இவர்களுக்கு தவெக-வில் சீட் வழங்கப்பட்டதன் பின்னணியில் ஒரு பெரிய மாஸ்டர் பிளான் (உள்நோக்கம்) இருப்பதாகப் பத்திரிகையாளர் துக்ளக் ரமேஷ் போட்டுடைத்துள்ளார். இவர்களுக்குச் சீட் கொடுத்தால் தான் அதிமுகவில் இருக்கும் மற்ற நிர்வாகிகளும் தவெக நோக்கி வருவார்கள் என்ற அரசியல் தந்திரமே இதன் பின்னணியில் உள்ளது என்று அவர் விவரித்துள்ளார். அத்துடன், பிரச்சாரத்தின் போது அதிமுகவை ஊழல் சக்தி என்று விமர்சித்த முதல்வர் விஜய், இப்போது கட்சி தாவி வருபவர்களைச் சேர்த்துக் கொள்வதன் மூலம் ‘உண்மையான ஊழல் சக்தி தவெக தான்’ என்பதை ஒப்புக்கொள்கிறாரா என்றும் அவர் அதிரடிக் கேள்வி எழுப்பியுள்ளார்.
