LATEST NEWS
காங்கிரஸுக்கு ‘டாட்டா’ காட்டும் திமுக..? கொல்கத்தாவில் மம்தாவுடன் கனிமொழி ரகசிய சந்திப்பு.. புதிய ‘மூன்றாவது அணி’ உதயமாகிறதா..?
மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியை, தி.மு.க. மூத்த தலைவரும் மக்களவை உறுப்பினருமான கனிமொழி கொல்கத்தாவில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து ரகசிய ஆலோசனை நடத்தியுள்ளார். தெற்கு கொல்கத்தாவின் காளிகாட் பகுதியில் நடைபெற்ற இந்த மூடிய கதவுகளுக்கு பின்னாலான சந்திப்பில் பல முக்கிய விவகாரங்கள் விவாதிக்கப்பட்டதாகத் திரிணாமுல் காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீப நாட்களாக மும்பையில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் டெல்லியில் என்சிபி தலைவர் சரத் பவார் ஆகியோரையும் கனிமொழி சந்தித்துப் பேசியுள்ளார். ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள பல்வேறு பிராந்திய கட்சிகளுக்கிடையே நிலவும் கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில், கனிமொழி அடுத்தடுத்து மேற்கொண்டு வரும் இந்த தேசிய அளவிலான சந்திப்புகள் தற்போதைய அரசியல் சூழலில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.
தற்போது தமிழகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் த.வெ.க. தலைமையிலான ஆளும் கூட்டணியில் காங்கிரஸ் அங்கம் வகிப்பதால், தி.மு.க. எதிர்க்கட்சியாகச் செயல்பட்டு வருகிறது. அதேபோல், தேசிய அளவில் திரிணாமுல் காங்கிரஸும் காங்கிரஸும் ‘இந்தியா’ கூட்டணியில் இருந்தாலும், மேற்கு வங்கத்தில் அக்டோபர் 6 இடைத்தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக இவ்விரு கட்சிகளுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.
ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் நடந்த ‘இந்தியா’ கூட்டணிக் கூட்டத்தைப் புறக்கணித்த தி.மு.க., காங்கிரஸ் மீது சற்று அதிருப்தியில் இருந்து வருகிறது. இதனால், காங்கிரஸ் தலைமையிலான கூட்டமைப்புக்கு வெளியே இருக்கும் பிராந்திய கட்சிகளை ஒருங்கிணைத்து, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸிற்கு மாற்றாக ஒரு ‘மூன்றாவது அணி’ அல்லது புதிய கூட்டணியை உருவாக்குவதற்கான முயற்சியாகவே கனிமொழியின் இந்த சந்திப்புகள் இருக்கலாம் என அரசியல் வட்டாரங்களில் பலத்த ஊகங்கள் கிளம்பியுள்ளன.
