LATEST NEWS
“தேவையில்லாத வேலை பண்ணாதீங்க” தலைமை ஏற்கனவே சொல்லியும்.. ஏன் இந்த மாதிரி பண்ணுறீங்க.? அமைச்சர் கீர்த்தனாவை வெளுத்து வாங்கிய தவெக அமைச்சர் நிர்மல் குமார்
தமிழக வெற்றிக் கழக அரசைச் சேர்ந்த தொழில்துறை அமைச்சர் எஸ். கீர்த்தனா, அரசுப் பள்ளி ஒன்றில் திடீர் ஆய்வு மேற்கொண்டு அங்கிருந்த மாணவி ஒருவரின் ஆங்கிலத் திறனைச் சோதித்துள்ளார். இது தொடர்பான வீடியோவை அவர் சமூக வலைத்தளங்களில் ரீல்ஸாக வெளியிட, அது தவெக அரசுக்கு பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் மற்றும் ஆசிரியர்களின் செயல்பாடுகளை அவர் குறை கூறுவது போலவும், மாணவர்களைத் தனிமைப்படுத்திப் பேசுவது போலவும் உள்ளதாகக் கூறி எதிர்க்கட்சிகளும், குழந்தைகள் உரிமை ஆர்வலர்களும் தவெக அமைச்சரின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த சர்ச்சை குறித்து தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தவெக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் நிர்மல் குமார், சொந்தக் கட்சியின் அமைச்சரான கீர்த்தனாவின் செயல்பாட்டிற்கு அதிருப்தி தெரிவித்துள்ளார். “அமைச்சர் கீர்த்தனா எந்த நோக்கத்தில் அரசுப் பள்ளியில் இந்த ஆய்வை மேற்கொண்டார் என்று தனக்குத் தெரியவில்லை” என்று குறிப்பிட்ட அவர், அரசு ஊழியர்களையோ அல்லது அரசு அலுவலகங்களையோ தேவையின்றிச் சென்று ஆய்வு செய்வது முறையல்ல என்ற தொனியில் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும், பல்வேறு துறைகளிலும் முதலில் தேவையான உள்கட்டமைப்பு மற்றும் பணியாளர் பற்றாக்குறைகளைச் சீரமைத்து, அந்தத் துறைகளைத் தன்னிறைவு பெற்றதாக மாற்றிய பிறகே இது போன்ற ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று அமைச்சர் நிர்மல் குமார் வலியுறுத்தியுள்ளார். போதிய வசதிகள் இல்லாத நிலையில் ஊழியர்களைக் குறை கூறுவது பலன் தராது எனக் குறிப்பிட்ட அவர், தேவையின்றி அரசு நிறுவனங்களில் நுழைந்து ஆய்வுகள் நடத்தக் கூடாது என முதலமைச்சர் அலுவலகம் (CMO) ஏற்கெனவே அமைச்சர்களுக்குத் தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
