LATEST NEWS
“ஆர்வக்கோளாறுக்கு ஒரு அளவே இல்லையா?.. உங்க பொண்ணா இருந்தா இப்படி செய்வீங்களா?”.. கீர்த்தனாவை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய லட்சுமணன்..!!!
சிவகாசி அரசுப் பள்ளியில் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா மேற்கொண்ட ஆய்வும், அது தொடர்பான வீடியோ பதிவும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமைச்சர்களின் “ரீல்ஸ் மோகம்” மற்றும் செயல்பாடுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் லட்சுமணன் கடுமையாக விமர்சித்துள்ளார். அமைச்சர்களின் ஆர்வக்கோளாறும், சமூக வலைதளங்களில் வைரலாக வேண்டும் என்ற போதையும்தான் இதுபோன்ற சம்பவங்களுக்குக் காரணம் என்று சாடிய அவர், அமைச்சர்களுக்குப் பொதுவெளியில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்துப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
வகுப்பறைக்குள் ஊடகங்களை அனுமதித்ததே அமைச்சரின் தவறுதான் என்று சுட்டிக்காட்டிய லட்சுமணன், அந்த மாணவிக்கு ஆங்கிலம் தெரியுமா இல்லையா என்பது முக்கியமல்ல, ஆனால் அவரது தயக்கத்தைப் படம் பிடித்து உலகம் முழுவதும் பரப்பி அவமானப்படுத்தியது மிகப்பெரிய தவறு என்று கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவி அமைச்சரின் மகளாகவோ அல்லது தங்கையாகவோ இருந்தால் இப்படிப் பொதுவெளியில் விட்டு வேடிக்கை பார்ப்போமா என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார். ஆங்கிலம் தெரியாதது ஒன்றும் குற்றமல்ல என்றும், தமிழ் நன்றாகத் தெரிந்தால் அதைவிடப் பெருமை வேறொன்றும் இல்லை என்றும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர்களைப் பார்த்து எம்.எல்.ஏக்களும், அவர்களைப் பார்த்து ஒன்றியச் செயலாளர்களும் அதிகாரமில்லாமல் ஆய்வு செய்யக் கிளம்பும் போக்கு அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதாக அவர் கவலை தெரிவித்துள்ளார். மக்கள் பிரதிநிதிகள் மேற்கொள்ளும் ஆய்வுகள் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கானதாக இருக்க வேண்டுமே தவிர, கேமரா முன்பு மாணவர்களின் பலவீனத்தைக் காட்சிப்படுத்தி ரீல்ஸ் போடுவதற்கானதாக மாறிவிடக் கூடாது என்பதே இந்தச் சர்ச்சையின் மையக் கருத்தாக உள்ளது. நல்ல விஷயங்களை வீடியோவாகப் பதிவு செய்து வெளியிடுவதில் தவறில்லை, ஆனால் இதுபோன்ற செயல்கள் தவிப்பையே மிச்சமாக்கும் என்று லட்சுமணன் எச்சரித்துள்ளார்.
