LATEST NEWS
“தொட்டால் உயிர் பிழைக்க மாட்டீர்கள்..!” வெள்ளத்தில் மிதக்கும் சிலிண்டர்களால் கலெக்டர் விடுத்த அதிரடி எச்சரிக்கை..!!
மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டம் பன்வெல் பகுதியில் உள்ள சாவணே என்ற இடத்தில் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்திற்குச் சொந்தமான காஸ் சிலிண்டர் நிரப்பும் ஆலை உள்ளது. கடந்த சில நாட்களாக இப்பகுதியில் பெய்து வரும் மிக பலத்த மழை காரணமாக, இந்த ஆலையின் வளாகத்திற்குள் திடீரென வெள்ள நீர் புகுந்தது. நீரின் வேகம் மிக அதிகமாக இருந்ததால், அங்கு வரிசையாக வைக்கப்பட்டிருந்த சுமார் 3,000 காஸ் சிலிண்டர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, அருகில் உள்ள பாதாளகங்கா ஆற்றில் கலந்தன. ஆற்று வெள்ளத்தில் ஆயிரக்கணக்கான சிவப்பு நிற சிலிண்டர்கள் மிதந்து செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சிலிண்டர்களில் சில முழுமையாக காஸ் நிரப்பப்பட்டவை, சில காலியானவை என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆற்றின் கரையோரம் வசிக்கும் கிராம மக்கள் இந்த சிலிண்டர்களைப் பார்த்து கடும் பீதியடைந்துள்ளனர். ஒருவேளை இந்த சிலிண்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி வெடித்திருந்தால், கரையோரக் கிராமங்களில் மிகப்பெரிய பேரழிவு ஏற்பட்டிருக்கும் என்று சமூக வலைதளங்களில் மக்கள் அச்சம் தெரிவித்து, பாதுகாப்பு அலட்சியம் குறித்துக் கேள்வி எழுப்பி வருகின்றனர். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த மாவட்ட நிர்வாகம் மற்றும் மீட்பு முகமைகள் உடனடியாக களமிறங்கி, சிலிண்டர்களைப் பத்திரமாக மீட்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன.
https://twitter.com/TheBahubali_IND/status/2074855902738514155/video/1
ராய்காட் மாவட்ட ஆட்சியர் கிஷன் ஜாவ்லே பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆற்றில் மிதந்து வரும் சிலிண்டர்களை வேடிக்கை பார்க்கவோ அல்லது அவற்றை எடுத்து வீட்டிற்குச் செல்லவோ முயற்சிக்கக் கூடாது என்று அவர் கடுமையாக எச்சரித்துள்ளார். எந்தெந்த சிலிண்டர்களில் காஸ் கசிவு உள்ளது என்று தெரியாததால், அவற்றைத் தொடுவதோ, திறக்க முயல்வதோ உயிருக்கே ஆபத்தாக முடியலாம் எனக் குறிப்பிட்டுள்ளார். ஆற்றங்கரையோரம் சிலிண்டர்கள் ஒதுங்குவதைக் கண்டால், உடனடியாக உள்ளூர் போலீசாருக்கோ அல்லது நிர்வாக அதிகாரிகளுக்கோ தகவல் தெரிவிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
